» வினைத்தூய்மை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௬௱௫௰௧)

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும்.

மு.வ உரை:ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

௬௱௫௰௨)

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.

மு.வ உரை:புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

௬௱௫௰௩)

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.

மு.வ உரை:மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

௬௱௫௰௪)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்.

மு.வ உரை:அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

௬௱௫௰௫)

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று.

மு.வ உரை:பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை:என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.

௬௱௫௰௬)

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.

மு.வ உரை:பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை:தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

௬௱௫௰௭)

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.

மு.வ உரை:பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை:பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

௬௱௫௰௮)

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்.

மு.வ உரை:ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

௬௱௫௰௯)

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.

மு.வ உரை:பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.

சாலமன் பாப்பையா உரை:பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.

௬௱௬௰)

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

மு.வ உரை:வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.