» உரியியல்

ஆசிரியர் : தொல்காப்பியர்.
௧)

உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி
பெயரினும் வினையினும் மெய் தடுமாறி
ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும்
பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்
பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின்
எச் சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல்

௨)

வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன

௩)

அவைதாம்,
உறு தவ நனி என வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப

௪)

உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும்

௫)

குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே

௬)

சல்லல் இன்னல் இன்னாமையே

௭)

மல்லல் வளனே ஏ பெற்று ஆகும்

௮)

உகப்பே உயர்தல் உவப்பே உவகை

௯)

பயப்பே பயன் ஆம்

௰)

பசப்பு நிறன் ஆகும்

௰௧)

இயைபே புணர்ச்சி

௰௨)

இசைப்பு இசை ஆகும்

௰௩)

அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி

௰௪)

மழவும் குழவும் இளமைப் பொருள

௰௫)

சீர்த்தி மிகு புகழ் மாலை இயல்பே

௰௬)

கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்

௰௭)

கதழ்வும் துனைவும் விரைவின் பொருள

௰௮)

அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்

௰௯)

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள

௨௰)

தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும்

௨௰௧)

கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு

௨௰௨)

தடவும் கயவும் நளியும் பெருமை

௨௰௩)

அவற்றுள்,
தட என் கிளவி கோட்டமும் செய்யும்

௨௰௪)

கய என் கிளவி மென்மையும் செய்யும்

௨௰௫)

நளி என் கிளவி செறிவும் ஆகும்

௨௰௬)

பழுது பயம் இன்றே

௨௰௭)

சாயல் மென்மை

௨௰௮)

முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே

௨௰௯)

வம்பு நிலை இன்மை

௩௰)

மாதர் காதல்

௩௰௧)

நம்பும் மேவும் நசை ஆகும்மே

௩௰௨)

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்

௩௰௩)

புலம்பே தனிமை

௩௰௪)

துவன்று நிறைவு ஆகும்

௩௰௫)

முரஞ்சல் முதிர்வே

௩௰௬)

வெம்மை வேண்டல்

௩௰௭)

பொற்பே பொலிவு

௩௰௮)

வறிது சிறிது ஆகும்

௩௰௯)

எற்றம் நினைவும் துணிவும் ஆகும்

௪௰)

பிணையும் பேணும் பெட்பின் பொருள

௪௰௧)

பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்

௪௰௨)

படரே உள்ளல் செலவும் ஆகும்

௪௰௩)

பையுளும் சிறுமையும் நோயின் பொருள

௪௰௪)

எய்யாமையே அறியாமையே

௪௰௫)

நன்று பெரிது ஆகும்

௪௰௬)

தாவே வலியும் வருத்தமும் ஆகும்

௪௰௭)

தெவுக் கொளல் பொருட்டே

௪௰௮)

தெவ்வுப் பகை ஆகும்

௪௰௯)

விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே

௫௰)

அவற்றுள்,
விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்

௫௰௧)

கம்பலை சும்மை கலியே அழுங்கல்
என்று இவை நான்கும் அரவப் பொருள

௫௰௨)

அவற்றுள்,
அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்

௫௰௩)

கழும் என் கிளவி மயக்கம் செய்யும்

௫௰௪)

செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்

௫௰௫)

விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்

௫௰௬)

கருவி தொகுதி

௫௰௭)

கம நிறைந்து இயலும்

௫௰௮)

அரியே ஐம்மை

௫௰௯)

கவவு அகத்திடுமே

௬௰)

துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப் பொருட் கிளவி என்மனார் புலவர்

௬௰௧)

அவற்றுள்,
இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும்

௬௰௨)

இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை

௬௰௩)

ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள

௬௰௪)

கவர்வு விருப்பு ஆகும்

௬௰௫)

சேரே திரட்சி

௬௰௬)

வியல் என் கிளவி அகலப் பொருட்டே

௬௰௭)

பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள

௬௰௮)

வய வலி ஆகும்

௬௰௯)

வாள் ஒளி ஆகும்

௭௰)

துய என் கிளவி அறிவின் திரிபே

௭௰௧)

உயாவே உயங்கல்

௭௰௨)

உசாவே சூழ்ச்சி

௭௰௩)

வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம்

௭௰௪)

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள

௭௰௫)

நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப

௭௰௬)

நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை

௭௰௭)

புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே

௭௰௮)

நனவே களனும் அகலமும் செய்யும்

௭௰௯)

மதவே மடனும் வலியும் ஆகும்

௮௰)

மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே

௮௰௧)

புதிதுபடல் பொருட்டே யாணர்க் கிளவி

௮௰௨)

அமர்தல் மேவல்

௮௰௩)

யாணுக் கவின் ஆம்

௮௰௪)

பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள

௮௰௫)

கடி என் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே

௮௰௬)

ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே

௮௰௭)

ஐ வியப்பு ஆகும்

௮௰௮)

முனைவு முனிவு ஆகும்

௮௰௯)

வையே கூர்மை

௯௰)

எறுழ் வலி ஆகு

௯௰௧)

மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
முன்னும் பின்னும் வருபவை நாடி
ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல்
தம்தம் மரபின் தோன்றும்மன் பொருளே

௯௰௨)

கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல
வேறு பிற தோன்றினும் அவற்றொடு கொளலே

௯௰௩)

பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே

௯௰௪)

பொருட்குத் திரிபு இல்லை உணர்த்த வல்லின்

௯௰௫)

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே

௯௰௬)

மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா

௯௰௭)

எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே

௯௰௮)

அன்ன பிறவும் கிளந்த அல்ல
பல் முறையானும் பரந்தன வரூஉம்
உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும்
வரம்பு தமக்கு இன்மையின் வழி நனி கடைப்பிடித்து
ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான்
பாங்குற உணர்தல் என்மனார் புலவர்