» கிளவியாக்கம்

ஆசிரியர் : தொல்காப்பியர்.
௧)

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே

௨)

ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல்
பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே

௩)

ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று
ஆயிரு பாற்சொல் அஃறிணையவ்வே

௪)

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்
இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்

௫)

னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல்

௬)

ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல்

௭)

ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே

௮)

ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த
குன்றியலுகரத்து இறுதி ஆகும்

௯)

அ ஆ வ என வரூஉம் இறுதி
அப் பால் மூன்றே பல அறி சொல்லே

௰)

இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய
ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்
தோற்றம்தாமே வினையொடு வருமே

௰௧)

வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்
பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்
மயங்கல் கூடா தம் மரபினவே

௰௨)

ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி
ஆண்மை அறி சொற்கு ஆகு இடன் இன்றே

௰௩)

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்

௰௪)

வினாவும் செப்பே வினா எதிர் வரினே

௰௫)

செப்பே வழீஇயினும் வரை நிலை இன்றே
அப் பொருள் புணர்ந்த கிளவியான

௰௬)

செப்பினும் வினாவினும் சினை முதல் கிளவிக்கு
அப் பொருள் ஆகும் உறழ் துணைப் பொருளே

௰௭)

தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரை நிலை இலவே

௰௮)

இனச் சுட்டு இல்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை
வழக்கு ஆறு அல்ல செய்யுள் ஆறே

௰௯)

இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல்

௨௰)

செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்

௨௰௧)

ஆக்கம்தானே காரணம் முதற்றே

௨௰௨)

ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்
போக்கு இன்று என்ப வழக்கினுள்ளே

௨௰௩)

பால் மயக்கு உற்ற ஐயக் கிளவி
தான் அறி பொருள்வயின் பன்மை கூறல்

௨௰௪)

உருபு என மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
இரு வீற்றும் உரித்தே சுட்டும் காலை

௨௰௫)

தன்மை சுட்டலும் உரித்து என மொழிப
அன்மைக் கிளவி வேறு இடத்தான

௨௰௬)

அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை
நடை பெற்று இயலும் வண்ணச் சினைச் சொல்

௨௰௭)

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கின் ஆகிய உயர் சொல் கிளவி
இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல

௨௰௮)

செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலை பெறத் தோன்றும் அந் நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம் மூ இடத்தும் உரிய என்ப

௨௰௯)

அவற்றுள்,
தரு சொல் வரு சொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீர் இடத்த

௩௰)

ஏனை இரண்டும் ஏனை இடத்த

௩௰௧)

யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்

௩௰௨)

அவற்றுள்,
யாது என வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத்
தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே

௩௰௩)

இனைத்து என அறிந்த சினை முதல் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்

௩௰௪)

மன்னாப் பொருளும் அன்ன இயற்றே

௩௰௫)

எப் பொருள் ஆயினும் அல்லது இல் எனின்
அப் பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறல்

௩௰௬)

அப் பொருள் கூறின் சுட்டிக் கூறல்

௩௰௭)

பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் ஆயினும்
பொருள் வேறுபடாஅது ஒன்று ஆகும்மே

௩௰௮)

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்

௩௰௯)

முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே

௪௰)

சுட்டு முதல் ஆகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும்

௪௰௧)

சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்

௪௰௨)

ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி
தொழில் வேறு கிளப்பின் ஒன்று இடன் இலவே

௪௰௩)

தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி என்று
எண்ணு வழி மருங்கின் விரவுதல் வரையார்

௪௰௪)

ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற்சொல்
ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது

௪௰௫)

வியங்கோள் எண்ணுப்பெயர் திணை விரவு வரையார்

௪௰௬)

வேறு வினைப் பொதுச் சொல் ஒரு வினை கிளவார்

௪௰௭)

எண்ணுங்காலும் அது அதன் மரபே

௪௰௮)

இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா

௪௰௯)

ஒரு பெயர்ப் பொதுச் சொல் உள் பொருள் ஒழியத்
தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்

௫௰)

பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன

௫௰௧)

பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யுளுள்ளே

௫௰௨)

வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்
வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல் என்று
ஆயிரு வகைய பல பொருள் ஒரு சொல்

௫௰௩)

அவற்றுள்,
வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்
தேறத் தோன்றும் பொருள் தெரி நிலையே

௫௰௪)

ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும்

௫௰௫)

வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல்
நினையும் காலை கிளந்தாங்கு இயலும்

௫௰௬)

குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி

௫௰௭)

குடிமை ஆண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை அரசே மகவே குழவி
தன்மை திரி பெயர் உறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்
அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்

௫௰௮)

காலம் உலகம் உயிரே உடம்பே
பால் வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்
ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
பால் பிரிந்து இசையா உயர்திணை மேன

௫௰௯)

நின்றாங்கு இசைத்தல் இவண் இயல்பு இன்றே

௬௰)

இசைத்தலும் உரிய வேறிடத்தான

௬௰௧)

எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்தே

௬௰௨)

கண்ணும் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினை நிலைக் கிளவி
பன்மை கூறும் கடப்பாடு இலவே
தம் வினைக்கு இயலும் எழுத்து அலங்கடையே

Advertisement