» காக்கும் இமை நானுனக்கு 1

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.

'உன்னதம்.'

இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.

அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?

படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.

எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.

தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.

தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.

துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.

அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.

அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.

அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!

அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.

இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.

எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.

குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.

தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.

விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.

அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.

புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.

"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.

"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.

இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.

வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.

தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.

ஆனால், யாரிடம் முறையிடுவது?

அவளுக்கும் அலுத்து விட்டது.

எப்படியோ போகிறார்கள்.

இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.

இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.

அப்புறமென்ன?

விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.

"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.

ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.

ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!

கொஞ்சமென்ன? ரொம்பவே.


எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?

விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!

அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...

ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?

எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!

நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.

அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.

அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.

பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?

இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?

ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!

நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.

தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.

அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!

ஆனால் அதற்காகத் திருடலாமா?

அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!

இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.

நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.

இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.

ஆனால், அந்த நெடியவனை அவள் நெருங்கு முன், மற்ற திருதிரு முழிக்காரர்களில் ஒருவன், குறுக்கே வந்து, அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சற்றே விலகி நின்றான்.

ஏன் குறுக்கே வந்தான்? ஏன் விலகிப் போனான்?

எப்படியோ போகட்டும். இவனைப் பார்த்துத் திருடனை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, அவனை நெருங்கி, "இங்கிருப்பதை விட விலை உயர்ந்த வைரங்கள் அந்த அறையுள் இருக்கின்றன. பார்க்கிறீர்களா, சார்?" என்று கேட்டாள்.

"பரவாயில்லை. இந்த வளாகத்தில், விற்பனையில் அக்கறை உள்ளவள் நீ ஒருத்தியேனும் இருக்கிறாயே," என்றவன், அவளைப் பாராமல் எங்கோ நோக்க, அந்தத் 'திருதிருமுழி'களில் ஒருவன் வேகமாக அந்த அறையினுள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான்.

இன்னொருவன் நெடியவனை ஒட்டிக் கொண்டே நின்றான்.

இவர்கள் மூவருமே கூட்டுக் கள்ளர்களாக இருக்கக் கூடுமோ என்று எண்ணிவிட்டு, இராது என்ற முடிவுக்கு வந்தாள் நளினி. ஏனெனில், மற்றவர்கள் யாரும் பொருட்களின் பக்கம் பார்க்கக் கூட இல்லையே.

அப்படியே கூட்டாக இருந்தால் சேர்ந்து மாட்டட்டும் என்று எண்ணியவளாய், "வாருங்கள் சார்!" என்று அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றதும், அவளையே நோக்கி, "என்னவோ விலை உயர்ந்த வைரங்கள் இங்கே இருப்பதாகச் சொன்னாயே. பார்த்தால், வெறும் பீரோக்கள் மட்டும் தானே இருப்பதாக அல்லவா காண்கிறது?" என்று கேட்டான் அவன்.

"இருக்கின்றன சார். ரொம்பவும் விலை உயர்ந்தனவா? பீரோவில் நன்றாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். நான் போய்ச் சாவியை வாங்கி வந்து திறந்து காட்டுகிறேன் சார்!" என்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள், அதைவிட அதி விரைவாக அறைக்கதவை இழுத்துப் பூட்டினாள்.

மின்னலெனப் பாய்ந்து கீழிறங்கிச் சென்றவள், கீழ்த்தளத்தில் மூன்று தளத்து நிர்வாகிகளும் சேர்ந்து அமர்ந்து, நிறுவன விஷயமாகக் கலந்துரையாடும் - அவளது அபிப்பிராயப்படி, மூவருமாக வெற்று அரட்டையடிக்கும் - தனி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.

"அனுமதி கேட்காமல், நீ எப்படி..." என்று அதட்டலாகத் தொடங்கிய ஒருவரின் பேச்சை அலட்சியம் செய்து, "நம் கடை வளாகத்துள் ஒரு திருடன் புகுந்து விட்டான் சார். அவனைக் கூட்டாளிகளோடு, நம் ரிக்கார்டு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு வந்தேன். வந்து, அவர்களைப் பிடித்துப் போலீஸில் ஒப்படையுங்கள்!" என்று மூச்சு விடாமல் கூறி முடித்து விட்டு, அதன் பின்னரே மூச்சு வாங்கினாள் நளினி.

பெரியவர்கள் மூவருமே திகைத்துத் திணறிப் போயினர்.

அவர்கள் அறிந்தவரையும், திருடர்கள் என்றால், பில் போட்டுப் பணம் கொடுக்காமல், ஒன்றிரண்டு பொருட்களைக் கொண்டு செல்ல முயல்வார்கள். உள் வாயிலைத் தாண்டும் போதே 'பீப்' சத்தம் வந்துவிடும். 'செக்யூரிட்டி' ஆட்கள் உடனே திருடனைப் பிடித்து விடுவார்கள். மரியாதையாகப் பணத்தைக் கேட்பார்கள். பணம் இல்லையென்றால், பொருளைப் பிடுங்கிக் கொண்டு, நாலு தர்ம அடி போட்டு விரட்டி விடுவார்கள்.

இப்போது, இவள் ஒருத்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்களைப் பூட்டி வைத்தாளாமே! நம்புகிறாற் போலவா இருக்கிறது?

மூளை உள்ள எவனாவது அந்த அறைக்குள் வைர நகைகள் இருப்பதாக நம்பி உள்ளே செல்லுவானா?

அங்கே ஒன்றும் இல்லாததும் நல்லதுதான்.

ஆனால், எப்படிப்பட்ட முக்கியமான ரிக்கார்டுகள் அங்கே பத்திரமாய் வைக்கப்பட்டு இருக்கின்றன. சொத்துக் கணக்கு, சொத்துரிமைக் கணக்கு, இத்தனை ஆண்டு வரவு செலவுக் கணக்கு... அங்கே போய்த் திருட்டுப் பயல்களை விடுவதா?

ஆனால், இவள் சொன்னதை நம்பி, மூன்று தடிமாடுகள் வெறும் இரும்புப் பீரோக்கள் இருக்கும் அறைக்குள் போய் மாட்டிக் கொள்வார்களா?

கேழ்வரகில் நெய் வருகிறது என்று ஒரு புளுகிணி சொன்னால், அதை நம்புவதற்குக் கேட்கிற அவர்கள் என்ன, புத்தியில்லாதவர்களா?

அதுவும் பெரியம்மாவால் நியமிக்கப்பட்ட அவர்கள்!

மூவருமாகச் சேர்ந்து வெறும் கதை என்று முடிக்கையில், அந்தப் பக்கமாக வந்த நிறுவனப் பாதுகாப்பு அதிகாரியை, நளினி ஆத்திரத்தோடு கூப்பிட்டாள்.

"பூவலிங்கம் சார், நம் கடையில் வைர வாட்ச் திருடிய ஒருவனையும் அவனுடைய கூட்டாளிகளையும், மேல் தளத்து ரிக்கார்டு அறையில் பூட்டி வைத்திருக்கிறேன். கூடச் சில ஆட்களை அழைத்துப் போய், அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறீர்களா? அங்கே முக்கியமான பத்திரங்கள் இருக்கிறதாம்! அவை, அடுத்தவர் கண்ணில் பட்டாலும் ஆபத்து, என்று இந்தப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால், சீக்கிரமாக ஏதாவது செய்யுங்கள்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டுக் கொண்டாள்.

"வை...ர வாட்ச்! ஐயோ ஒன்றரை லட்சம் விலையாயிற்றே. அப்படியானால், நீ நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? கடவுளே, அந்தச் சின்னப் பயலுக்குத் தெரிந்தால், நம்மைத் தொலைத்துக் கட்டி விடுவானே. சீக்கிரம் ஓடுங்கள், பூவு. நம் ஆட்களையே நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டு, ஓடிப் போய், அவனைப் பிடியுங்கள். கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்புறமாகப் போலீசில் ஒப்படைக்கலாம். ஜன்னல் கின்னலைத் திறந்து, கடிகாரத்தை வெளியே வீசி விட்டால், நமக்கு நட்டத்துக்கு நட்டம். அத்தோடு, அவனது திருட்டுக்கு ஆதாரமும் இராது. அப்புறம் அவன் நம் மேலேயே கேஸ் போட்டு விடுவான்."

மூவருமாக ஆளுக்கொன்றாகச் சொன்னதின் சாராம்சத்தைக் காதில் வாங்கிக் கொண்டு, பூவலிங்கம் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு, மேல் தளத்துக்கு விரைந்தார்.

அதற்குள் நிர்வாகிகள் மூவரும் லிஃப்ட் வழியே, அங்கே வந்து சேர்ந்து, முடிந்தவரை தூரமாய் ஒதுங்கி நின்றனர். கூட வந்த நால்வரையும், நாலு இடங்களில் நிற்கச் செய்துவிட்டு, பூவலிங்கம் கதவைத் தட்டி, "பாருங்கப்பா, கதவைத் திறந்தால், நாலைந்து இடங்களில் துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அதனால் மரியாதையாகக் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வாருங்கள். அசட்டுத்தனம் எதுவும் செய்தால், உங்கள் உயிருக்குத் தான் ஆபத்து" என்று உரத்த குரலில் கூறிவிட்டு, மெல்லக் கதவைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றார்.

வாட்ச் திருடனுடைய கூட்டாளி, தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, உள்ளே ஏதோ சொல்ல, பூவலிங்கத்தின் எச்சரிக்கையைச் சற்றும் மதியாமல், வெகு அலட்சியமாக வெளியே வந்தான், அந்தத் திருடன்.

"என்ன பூவலிங்கம், என்னைச் சுட்டு விடுவீர்களா?" என்று கேட்ட அவனது ஏளனப் பார்வை, நளினியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.

சூழ இருந்தோரின் முகத்தில் இருந்த இறுக்கமும் பயமும் மறைந்து, ஒருவிதமான அசட்டுத் தனத்தோடு கூடிய பதற்றம் பரவியது.

மூன்று நிர்வாகிகளும், கூழைக் கும்பிடு போட்டபடி, "சா...ர் நீங்களா? உரிமைக்கார உங்களைப் போய், இந்த முட்டாள் பெண்..." என்று வழிந்தவாறு, அந்த நெடியவனிடம் ஓடினார்கள்.

திருடன் என்று தான் அறைக்குள் அடைத்து வைத்திருந்தது யார் என்று புரிபட, நளினியின் கால்களின் கீழிருந்த பூமி நழுவியது.

Advertisement