» காக்கும் இமை நானுனக்கு 3

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

இரவில் சரியாகத் தூங்காததால், மறுநாள் காலையில் வேலைக்குச் சென்ற நளினியின் கண்களில் சோர்வு தெரிந்தது.

மனதில் உற்சாகம் இருந்திருந்தால், அதை மறைக்க முடிந்திருக்கும்! ஆனால், அதை மறைக்க முயற்சி எடுக்கக் கூட, அவளுக்குத் தோன்றவில்லை.

முகம் முழுக்க உற்சாகத்தைப் பூசிக் கொண்டு நின்றாலும் தான் என்ன? 'உன்னத'த்தில் எல்லோருக்குமே, அவளது வேலை விவரம் தெரியும். எனவே அவள் சிரித்தாலும், அது வேஷம் என்று எல்லோருக்கும் தெரியும் தானே? அப்புறம் எதற்கு வீண் முயற்சி?

வீட்டில் தாய், தந்தை இருவருமே, இதில் வருத்தமாகக் காட்டிக் கொள்ளவில்லை.

ஒரு வேளை, அவளே வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், அதை அதிகப்படுத்த வேண்டாம் என்று எண்ணினார்களோ, என்னவோ.

"கௌரவமான இடம். வேறே மாதிரித் தொல்லை இராது என்று நினைத்தேன். ஆனால் இதே போல இன்னும் எத்தனையோ இடங்கள் இருக்கும் தானே? சும்மா வேலை போனதை நினைத்து வருத்தப்படாதே, செல்லம்!" என்றாள் தாயார்.

"அங்கே எல்லாம் வயதானவர்கள் கூட்டம். கலந்து பேசிச் சிரிக்கக் கூட முடியாது. இனியாவது, உன் வயதுப் பிள்ளைகள் இருக்கும் இடமாகப் பார்த்து வேலையில் சேர். நானும், என் நண்பர்களிடம் சொல்லி வைக்கிறேன்," என்றார் தந்தை.

முதலாளி இளைஞன் தான் என்று சொல்லலாமா என்று யோசித்துவிட்டுச் சும்மா இருந்தாள் நளினி.

ஏனோ, அவனைப் பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவளை வேலையை விட்டு நீக்கியவனைப் பற்றி, அவளுக்கு என்ன பேச்சு?

வேலைக்குப் போய், ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு விட்டுப் பார்த்தால், அங்கே பூவலிங்கம் வந்து காத்திருந்தார்.

"கணக்குத் தீர்த்துப் பணத்தை வாங்கிக் கொண்டு போக வந்தேன்," என்றார் அவர் வருத்தத்துடன். "கணக்கு எல்லாம் போட்டாயிற்று. ஆனால், நீயும் வந்து அவரோடு பேசிய பிறகு பணத்தைக் கொடுக்கலாம் என்று முதலாளி சொல்லியிருக்கிறாராம்."

அவள் வந்து என்ன ஆகப் போகிறது. பேசியும் தான் என்ன? ஏற்கெனவே சொல்லாததாகப் புதிதாகச் சொல்லவும் தான் என்ன இருக்கிறது?

ஆனால், ஏதேனும் இருக்கக் கூடும் என்று பூவலிங்கத்துக்கு ஒரு நப்பாசை இருந்தது.

"என்ன நடந்தது என்று, உன்னிடம் தெளிவாகக் கேட்டறிய எண்ணுகிறாரோ என்னவோ? நீ கவனித்தாயா நளினிம்மா, கொஞ்சம் முன்னதாகத்தான், நான் மேல் தளத்திலிருந்து இறங்கிப் போனேன். முதல் தளத்துப் படியிறங்கும் போது, கீழே முதலாளி 'லிஃப்டில்' ஏறுவதைப் பார்த்தேன். கூடவே, அவருடைய பாதுகாவலர்களும் இருந்தார்கள். அதனால் தான், யாரையாவது அனுப்பத் தேவை இல்லை என்று இருந்து விட்டேன்."

"அதை அவரிடம் சொல்லவில்லையா?"

"சொன்னேம்மா. ஆனால், முதலாளி அதை ஒத்துக் கொள்வதாக இல்லை. அவருடைய பாதுகாவலர்கள், அவரது காவலுக்காக மட்டும்தானாம். இங்குள்ள காவல் என் பொறுப்புதானாம்! அதற்காகத்தானே சம்பளம் வாங்கினாய் என்று கேட்கிறார்! இருபத்திரண்டு ஆண்டுகள் ஒரு பிழை இல்லாத பணி," என்று பெருமூச்சு விட்டார் பூவலிங்கம்.

"அதைத்தான் நானும் சொன்னேன்..." எனும்போதே, அவளுக்கு ஒரு குழப்பம். "அவருடைய பாதுகாவலர்கள் என்றீர்களே சார், உண்மையிலேயே அவர்கள் பழைய காலத்து ராஜாக்களுக்குப் போல இவருக்கு வெறும் பாதுகாவலர்கள் மட்டும் தானா? ஆனால் எதற்காக?" என்று வியப்புடன் கேட்டாள்.

"என்னவோ, பாதுகாப்பு விஷயத்தில், சின்னவர் கொஞ்சம் அதிகக் கவனம்தான். இங்குள்ள வீட்டை ஒரு கோட்டை போல ஆக்கிய பிறகுதான், வந்ததேயாம்..."

"பாட்டி வீடு. முன்னே பின்னே வந்ததே கிடையாது போலப் பேசுகிறீர்களே," என்றாள் அவள், நம்பாத குரலில்.

குரலைத் தணித்து, "பழைய கதை ஏதும் உனக்குத் தெரியாது என்று தோன்றுகிறது. பிடிவாதமாகச் சாதாரணக் குடும்பத்துப் பெண்ணை மணந்ததால், பெரியம்மா, தன் மகனை வீட்டை விட்டே விரட்டி விட்டார்கள். அப்புறமும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இருபது இருபத்தைந்து ஆண்டுகள் பேச்சு வார்த்தையே கிடையாதாம். ஏதோ விபத்தில், கணவன் மனைவி இரண்டு பேரும் இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டுப் போய்ப் பேரனைத் தன்னோடு வந்துவிடும்படி பெரியம்மா கூப்பிட்டிருக்கிறார்கள். அப்பனுக்குச் சரியான ரோஷக்காரப் பிள்ளை, இவர். முடியாது என்று மறுத்துவிட்டாராம்! அப்போது இவருக்கு இருபதே வயதாம். அப்புறமும் ஐந்தாறு வருஷம் இப்படியே போயிருக்கிறது. ஆறு மாதம் முன்பு, பெரியம்மாவுக்கு ரொம்ப முடியாமல் போன போது, பேரனை வரவழைத்து, எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டுக் கண்ணை மூடியிருக்கிறார்கள்."

"வரவழைத்து என்றால்? புவனேந்திரன் சார் எங்கே இருந்தாராம்?" என்று கதையில் ஈடுபட்டு நளினி வினவினாள்.

"கோவையில். அங்கேயும் அவருக்குச் சொத்து பத்து நிறைய இருக்கிறதாம். துணி மில் இரண்டு. திருப்பூரில் பனியன் தொழிற்சாலை. துணி மில்லுக்கு, மிஷின் தயாரிக்கிற தொழிற்சாலை. நிறைய சம்பாதனையாம். அதனால், இதைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று இல்லை. முதல் தடவையாக மூன்று மாதம் முன்பு வந்தார். இரண்டாம் முறை வருமுன், என் கழுத்துக்குக் கத்தி. பேரனும் பிடிவாதக்காரர்! அவரிடம், எனக்காகக் கொஞ்சம் பதமாய்ப் பார்த்துத்தான் நீ பேச வேண்டும். என் வேலை மட்டும் எனக்குக் கிடைத்துவிட்டால், என் காலம் முழுவதும் உனக்கு நன்றியோடு இருப்பேன்," என்றார் அந்தக் குடும்பஸ்தர்.

நளினிக்கு வேதனையாக இருந்தது.

அவளைக் காட்டிலும், இரு மடங்கு அதிக வயதானவர். அவளிடம் போய் இப்படிக் கெஞ்சுகிறாரே. குடும்பத்தைச் சுமப்பது என்றால் இதுதானா?

இதில் என்ன கஷ்டம் என்றால், அவரது வேலை அந்தரத்தில் ஊசலாடுவது, அவளது முட்டாள்தனத்தினால்!

கிட்டத்தட்ட நூல் அறுந்துவிட்ட நிலை.

அவளால் போன வேலை! திரும்பவும் அவருக்கு வேலை கிடைக்க இயன்ற வரையில் முயற்சி செய்ய வேண்டும்.

நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். ஆனால், முந்தைய நாள் வேண்டிக் கொண்டதற்கு மேலாகப் புவனேந்திரனிடம் என்ன சொல்லி வலியுறுத்த முடியும்?

நளினி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, புவனேந்திரனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்து விட்டது.

"முதலாளி அதற்குள் வந்தாயிற்றா?" என்று ஆச்சரியத்துடன் வினவினாள் அவள்.

"ஏழு மணிக்கே வந்து, கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே! இப்போது நீ வந்தாயிற்றா என்று பார்த்து வரச் சொல்லி அனுப்பினார்!" என்றார் சற்று முதியவரான கணக்கர்.

சிறு கவலையுடன் பூவலிங்கத்தை ஒரு தரம் பார்த்து விட்டு, நளினி எழுந்து நடந்தாள்.

கூடவே நடந்தபடி, "அவரிடம் போய், 'முதலாளி' என்று விடாதே, அம்மா! சின்னவருக்கு அது பிடித்தமாக இல்லை. பழங்காலப் பழக்கமாக இருக்கிறதாம். மரியாதையைக் காட்ட ஒரு சார் போட்டால் போதாதா என்கிறார்," என்றார் கணக்கர்.

அறையின் உள்ளே சென்றதும், பழைய கால மகாராஜா தர்பார் மாதிரி, முதலில் புவனேந்திரனுடைய பாதுகாவலர்களின் தரிசனம் கிடைத்தது.

இவர்கள் முன்னிலையில் பூவலிங்கம் சாருக்காக மன்றாட வேண்டுமா?

அவள் எரிச்சலை மறைத்துக் கொண்டு பேச முயற்சிக்கும் போதே, "உட்கார்" என்றான் புவனேந்திரன்.

அவளைச் சற்றுக் கூர்ந்து நோக்கிவிட்டு, "செக்யூரிட்டி பூவலிங்கம் மீண்டும் வேலை பெறுவது, உனக்கு எந்த அளவுக்கு முக்கியம்?" என்று கேட்டான்.

முகம் மலர, "ரொம்பவே முக்கியம் தான் சார். என்னுடைய முட்டாள்தனத்தினால் போன வேலை மீண்டும் கிடைத்து விட்டால், எனக்கு நிம்மதியாக இருக்கும். அத்தோடு, அவரும் உங்களைப் பார்த்துவிட்டுத்தான் கிழே இறங்கிப் போயிருக்கிறார். இரண்டு பாதுகாவலர்களோடு முதலாளி போகும்போது, பாதுகாப்பு பக்காவாகத்தானே இருக்கும் என்று நினைத்தாராம். அவர் மேல் தப்பே இல்லை சார்," என்றாள் அவள் அவசரமாக.

"நான் அதைப் பற்றிக் கேட்கவில்லை. அவரது வேலைக்காக நீ என்ன செய்யக் கூடும் என்று கேட்டேன்."

அவன் நிதானமாகப் பேசிய விதம் மனதில் பட, "என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?" என்று கவனத்துடன் கேட்டாள் அவள்.

"அடுத்த வாரம், சிம்லாவில் ஒரு மீட்டிங் இருக்கிறது. தனியே போனால், வேலை முடிந்ததும் போர் அடிக்கும். நீயும் என்னோடு வருகிறாயா? பூவலிங்கத்தை வேலையில் சேரச் சொல்லி விட்டே போகலாம்."

சில கணங்கள் நளினிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

எவ்வளவு சாதாரணமாகக் கேட்கிறான்.

அதிலும் அவனிடம் சம்பளம் வாங்கும் இரண்டு பேரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு. இவர்கள் அவனைப் பற்றியே கேவலமாக நினைக்கக் கூடுமே என்று கூடத் தோன்றாதா?

இப்போது, அவர்களை அனுப்பிவிட்டுப் பேசலாம் என்று அவள் சொன்னால் அது கூடத் தப்பாகத் தோன்றும்.

அவனைப் போலவே, அவர்கள் இருவரும் அருகே இல்லாதது போலப் பாவிக்க முயன்றபடி, "ஏன் சார்?" எறு கேட்டாள் அவள்.

"ஏன் என்றால்?"

"என்னை எதற்காகக் கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டேன்," என்றாள் அவள்.

"உன் வயதுக்கு, இந்தக் கேள்வி ஒத்துக் கொள்ள முடியாதது, அல்லது, முட்டாள்தனம்."

"நான் ஒன்றும் பொருள் புரியாமல் கேட்கவில்லை சார். பணம், பதவி, செல்வாக்கு என்று எதையாவது கையில் வைத்துக் கொண்டு, ஆண்கள் இந்த மாதிரி அத்து மீற முயற்சிப்பது, இந்தக் காலத்தில் ரொம்பவே பழக்கமாகிக் கொண்டு வருகிறது என்று எனக்குத் தெரியும். நான் கேட்பது அதுவல்ல. உங்கள் பணத்துக்கு, எத்தனையோ பெண்கள், விருப்பமாகவே வரக் கூடுமே. என்னை எதற்காகக் கேட்கிறீர்கள், என்று கேட்டேன்," என்று பொறுமை காட்டி விளக்கம் கொடுத்தாள் அவள்.

ஒரு சின்ன முறுவல் தோன்றி மறைய, "உனக்குப் பேசத் தெரிகிறது. அதனால், போரடிக்காது," என்பது அவனது விளக்கமாக இருந்தது.

பேசத் தெரிகிறதா? நன்றாகக் கேட்டுக் கொள் என்று உள்ளூரக் கறுவியவாறு, "ஒரு காலத்தில் மற்ற நாட்டு மக்கள், நம் நாட்டு உப்புக்காகத் தங்கமும், வைரமுமாகக் கொண்டு வந்து கொட்டினார்களாம்! பாரம்பரியமாகக் கடை நடத்தும் நீங்கள், அந்தப் பழங்கதையை நினைத்து, வெறும் உப்புக் கல்லுக்காக, வைரக்கல்லின் விலையைக் கேட்கலாம். ஆனால், நான் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், சார்! உப்பே இல்லாமல் சமைத்தாலும் சமைப்பேனே தவிர, வைரக்கல்லின் விலையைக் கொடுத்து உப்பு வாங்க நான் தயாரில்லை. ரொம்பவும் தயவு பண்ணி, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்," என்றாள் நளினி, போலிப் பணிவுடன்.

பதிலுக்குக் கண்டபடி கத்தப் போகிறான் என்று அவள் எதிர்பார்த்தபோது, அவள் சற்றும் எதிர்பாராத விதமாக, வெளேரென்று வரிசைப் பல் தெரியப் புவனேந்திரன் வாய் விட்டு நகைத்தான்.

ஒரு கணம் பிரமித்த நளினி, உடனேயே சுதாரித்தாள்.

இந்த மனிதன் சரியானவன் அல்ல! நல்லவனாக இருந்திருந்தால், இந்த மாதிரிக் கேட்டிருக்க மாட்டான்! இவனது சிரிப்பு எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும், ரசிப்பது சரியல்ல.

"விஷயம் அவ்வளவுதான் என்றால், நான் போகிறேன், சார்."

"ஆமாமாம்! இன்று, நீ வேலையைத் தொடங்கவே இல்லை, அல்லவா? இப்போதே, அரை மணி நேரம் விரயம். போய் வேலையைப் பார்," என்றான் புவனேந்திரன் - ஒன்றுமே நடவாதது போன்று, சர்வ சாதாரணமாக.

அப்படியானால், புவனேந்திரன் உண்மையாகக் கேட்கவில்லையா? அவளைப் பற்றி அறிவதற்காக இருக்குமோ?

உண்மையோ, பொய்யோ, சம்பந்தம் இல்லாத இரண்டு பேரை வைத்துக் கொண்டு, இந்த மாதிரி விஷயத்தைப் பேசுவது... ஊகூம், ஒன்றும் சரியே இல்லை.

யோசித்தவாறே நடந்தவளுக்கு, அறையை விட்டு வெளியே வந்ததும், கால்கள் தயங்கின.

அங்கே அலுவல் அறையில், பாவம்! பூவலிங்கம் காத்திருப்பாரே.

அதற்காகப் புவனேந்திரன் கேட்டது போல நடப்பது முடியாத காரியம். ஆனால், அவளுடைய தந்தை போன்ற வயதுடைய ஒருவரின் முகத்தில் நிராசை பரவுவதைக் காண, அவளுக்கு வேதனையாக இருந்தது.

அவரது தலை விதியை வேறு யாராவது அவரிடம் சொல்லட்டும்.

கீழே அலுவல் அறைக்குப் போகாமலே, 'லிஃப்ட்' வழியாக மூன்றாம் தளத்தை அடைந்து, அங்கே தன் வேலையை நளினி தொடங்கினாள்.

ஆனால், சற்று நேரத்தில், "நளினியிடம் ஒரு வார்த்தை பேச வேண்டும்," என்று பூவலிங்கத்தின் குரல் கேட்கவும், அவளுக்குக் கலக்கம் உண்டாயிற்று.

இதிலிருந்து தப்ப வழியே இல்லையா என்று எண்ணும் போதே, காவல் அதிகாரியின் குரல், கொஞ்சம் கணீர் என்று இருப்பதுபோல ஒரு சந்தேகம் தோன்றியது.

சமாளித்துக் கொண்டு விட்டாரா?

"அவளால் உனக்கு வந்த துன்பம் போதாதா? போ, போ. உன்னிஷ்டம்," என்று தளத்து நிர்வாகியின் எரிச்சலுற்ற குரலைத் தொடர்ந்து, பூவலிங்கத்தின் காலடி ஓசை அவளை நெருங்கியது.

சங்கடத்துடன் அவள் திரும்பிய போது, மலர்ந்த முகத்துடன், "ரொம்ப நன்றி, நளினிம்மா!" என்றார் அவர் மகிழ்ச்சியோடு.

அவள் புரியாமல் நோக்குகையில், "எனக்காக முதலாளியிடம் ரொம்பவும் வாதாடி, மீண்டும் வேலையை வாங்கித் தந்திருக்கிறாய். இப்போதே வேலையைத் தொடர்ந்து பார்க்கும்படி, சார் சொல்லிவிட்டார். அதுதான் நன்றி சொல்லிவிட்டுப் போக வந்தேன்," என்றார் அவர்.

"நான் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை, சார்."

"முதலாளி மீண்டும் வேலைக்குச் சேர்க்கும் அளவுக்குச் சொல்லியிருக்கிறாய். அதுவே எவ்வளவு பெரிய காரியம்! என் குடும்ப முழுதுக்குமே நிம்மதியைத் தந்திருக்கிறாய். நன்றிம்மா. இனி நான் வேலையைப் பார்க்கிறேன்," என்று சென்றார் அவர்.

நளினிக்கு ஒரே ஆச்சரியமாகிப் போயிற்று.

முடியாது, முடியாது என்று அவ்வளவு சொல்லிவிட்டு, அதற்கு மேலாக என்னென்னமோ அசிங்கமாகப் பேசி, அவளுக்கு வெறுப்பேற்றிவிட்டு, பூவலிங்கம் சாருக்கு வேலையை மறுபடியும் கொடுத்திருக்கிறானே!

இவன் என்ன மாதிரி மனிதன்?

கிளம்பி வீட்டுக்குச் செல்லுகிற நேரம், 'உன்னத'த்தின் அகன்ற படிகளில், அவள் புவனேந்திரனைச் சந்திக்க நேரவும் அவனிடமே, "அழுக்கும் மண்ணும் கலந்த உப்பு என்று தெரிந்தும், வாங்குகிறீர்களே!" என்று அதிசயம் காட்டிக் கேட்டாள்.

குத்தல் புரிந்தும் ஆத்திரப்படாமல், "அது முன்பு," என்றான் அவன். "எப்பேர்ப்பட்ட தண்டனை கிடைக்கும் என்று தெரிந்துவிட்டதால், பூவலிங்கத்துக்கு இனித் தவறு நடக்கவிடும் துணிவிராது. எனவே, அவர் மிகச் சிறந்த காவலராகக் கூட ஆகிவிடக் கூடும். ம்ம்ம்... அதாவது உன் மொழியில் சொல்லப் போனால், அழுக்கு, மண் அனைத்தும் நீக்கிய சுத்தமான, பரிசுத்தமான உப்பு," என்று முறுவலித்தான் புவனேந்திரன்.

அவன் சொன்ன தினுசில், கூடச் சேர்ந்து சிரித்த போதும், உள் மனம் அதில் ஒன்றாமல், உள்ளூர ஓர் ஏமாற்றம் பரவுவதை நளினியால் உணர முடிந்தது.

ஏன்?

Advertisement