» காக்கும் இமை நானுனக்கு 10

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

நளினியின் மனம் ரொம்பவே குழம்பலாயிற்று.

புவனேந்திரனின் மர்மப் பயணத்தின் காரணம், அவனுடைய முதல் மனைவி தொடர்புடையதாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் மட்டும்தான், அவளுக்கு முதலில் தோன்றியது.

அந்த ரதியின் பிறந்த நாளோ? அன்றி இறந்த நாளோ? அது தொடர்பான சடங்குகளுக்காகப் புவனேந்திரன் சென்றிருக்கக் கூடும் என்றாலும், அதை முழுமையாக அவளால் ஒப்ப முடியவில்லை.

அந்த மாதிரி விஷயம் என்றால், அதை மூடி மறைப்பானேன்?

அதுவும், ஏற்கெனவே மணமானதை வெளிப்படையாகச் சொன்னவன், இதையும் சொல்லிவிட்டே சென்றிருக்கலாம். ஒருவர் இறந்து விட்டால், சில குறிப்பிட்ட நாட்களில் அவர்களை நினைவு கூர்ந்து, சில சடங்குகளைச் செய்வது, நம்மில் பழக்கம் தானே?

அதுவும் அவனது முதல் மணம் அவனது கடந்த காலம். அதை அவள் பொருட்படுத்தப் போவதில்லை என்று விட்ட பிறகு, இது போன்ற விஷயங்களை அவளிடம் மறைக்கத் தேவையே இல்லையே.

எனவே இது வேறு விஷயம்.

எப்போதும், கிங்கரர்கள் மாதிரிக் கூடவே நிற்கும் காவலர்களின் காதுகளுக்குக் கூட எட்டக் கூடாத தொழில் ரகசியமாக இருக்கக் கூடும் என்று தன்னைத் தானே, நளினி சமாதானம் செய்து கொண்ட போதும், அவள் கொஞ்சமும் அறியாத ஏதோ ஒன்று புவனேந்திரனின் வழியில் இப்போது இருப்பது, அவளுக்கு உறுத்தலாகவே இருந்தது.

அப்படி எதையும் அவனிடமிருந்து மறைக்க வேண்டும் என்று, அவளுக்குத் தோன்றியதே இல்லையே.

இந்நிலையில், அவளது ஆத்திரத்தைத் தூண்டும் விதமாக, மறுநாள் வேறொன்று நடந்தது.

தனக்குப் போலவே, புவனேந்திரன் அவளுக்கும் காவலுக்கு ஆள் வைத்தது, நளினிக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. அது பற்றித் தன்னுடைய வருங்காலக் கணவனுடன் பேசி, அந்தக் காவலை நிறுத்தியாக வேண்டும் என்று, அவள் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள்.

ஆனால், ஏற்பாடு செய்து, சம்பளமும் கொடுக்கும் புவனேந்திரனின் சொல்தான், அந்தப் பாதுகாவலர்களிடம் எடுபடும் என்று புரிந்ததால், அவன் திரும்பி வரும்வரை, இந்தப் பாதுகாவல் விஷயம் அவளது குடியிருப்புப் பகுதியில் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காத விதத்தில், மிகவும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டாள்.

சாதாரணமாக வெளியே செல்வதை நிறுத்திக் கொண்டு, தந்தை வேலைக்குச் செல்லும் போது, அவருடனேயே 'உன்னத'த்துக்குச் சென்று இறங்கிக் கொண்டு, வேலை முடிந்து, அவர் திரும்பி வரும்போது, அவருடனேயே அவளும் திரும்பி வந்தாள்.

குடியிருப்புப் பகுதிக் கடைக்குக் கூடச் செல்வது இல்லை.

துணிகளுக்கு அலங்கார வேலைக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, வேலை முடித்த துணிகளை உரிய இடங்களில் சேர்ப்பது எல்லாவற்றையும் விட்டு விட்டாள்.

எனவே, அந்தக் காவலர்கள் அவளைப் பின் தொடர்வது, வெளிப்படையாக யார் கண்ணிலும் பெரிதாகப் படாமலே இருந்து வந்தது.

ஆனால், அன்று இரவெல்லம் மனக் குழப்பத்தில் புரண்டவள், காலையில் அதிக நேரம் தூங்கிவிட, சுதர்சனமும் அன்று வெளியே ஒருவரைச் சந்தித்துப் பேசி விட்டு வேலைக்குப் போக வேண்டியதாக இருந்ததால், தேவைப் பட்டால், நளினியை ஆட்டோவில் போகச் சொல்லும்படி மனைவியிடம் கூறிவிட்டு, அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார்.

நளினிக்கும் அது உசிதமாகவே தோன்றியது.

குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியே வந்தால் 'உன்னத'த்துக்கு வெகு அருகிலேயே இறங்குவதற்குப் பஸ் வசதி இருந்தது.

ஆனால், அவள் பஸ்ஸில் ஏறி, முன்னும் பின்னுமாக இந்தப் பாதுகாவலர்களும் ஏறி, இங்குமங்கும் விழித்துப் பார்த்தால், ஏதேனும் ஏடாகூடம் ஆகி, இவர்களுக்குத் தர்ம அடி விழுந்து விடுமோ என்று, நளினிக்குப் பயமாக இருந்தது.

எனவே, அலுவலகத்துக்குக் கிளம்பி, தெருமுனை வரை நடந்து சென்று, அங்கே வந்த ஆட்டோ ரிக்ஷாவை நிறுத்தி, ஏறினாள்.

முன்னும் பின்னுமாகச் சக்திவேலும், அவனுடைய கூட்டாளியும் கூடவே வந்த போதும், யாரோ தெருவில் போகிறவர்கள் போலவே வந்ததால், அதுவரை பிரச்சனை இல்லை.

ஆனால், அவள் வண்டியில் ஏறுகையில், சக்திவேல் அருகில் வந்து, ஆட்டோ ஓட்டியை முதுகில் தட்டி, "பாரப்பா, நான் இந்த அம்மாவுக்குக் காவல், பின்னோடு பைக்கில் வருவேன், கவனித்துச் சற்று மெதுவாகப் போ," என்றான்.

குழப்பமும் குறுகுறுப்புமாக நோக்கிய போதும், ஆட்டோ ஓட்டியும் தலையாட்டிவிட்டு, ஏவப்பட்ட விதமாக, நிதானமாகவே வண்டியை ஓட்டினான்.

பக்கவாட்டுக் கண்ணாடியில் தெரிந்த அவனது முகத்தில், குறுகுறுப்பையும் ஆர்வத்தையும் கண்ட நளினிக்கு மனதோடு, உடம்பும் கூசிக் குறுகிப் போயிற்று.

இந்த ஆட்டோ ஓட்டி இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பான்?

'காதலனோ, கணவனோ இவளுக்குக் காவல் வைத்திருக்கிறான். இவளது நடத்தை எப்படிப்பட்டதோ?' என்று தானே எண்ணுவான்?

அவன் நினைப்பது மட்டுமா? அவன் முகத்தைப் பார்த்தாலே, இந்தக் கதையை யார் யாரிடமோ சொல்லத் துடித்துக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

கண், காது, மூக்கு வைத்து, எத்தனை பேரிடமோ நன்றாக அளக்கப் போகிறான்.

சே! என்ன கேவலம், என்ன கேவலம் என்று நளினியின் மனம் பதறித் தவித்தது.

இன்றைக்கு இந்த அசட்டுத் தனத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்த பிறகுதான், நளினிக்குச் சரியாக மூச்சுக்கூட விட முடிந்தது.

அவ்வளவு ஆத்திரம்.

வழக்கம் போலவே, மற்றவர்களை விடச் சீக்கிரமாகவே புவனேந்திரன் வந்திருந்தான்.

வெளிப்படையாக யாரும் உறுதிப் படுத்தாவிட்டாலும், ஊகமும் வதந்தியுமாகப் புவனேந்திரன் - நளினி உறவு அங்கே எல்லோருக்கும் தெரிந்து போயிருந்தது.

அதனால், அவளுக்குத் தனி மரியாதையும் கிடைத்துக் கொண்டிருந்தது.

எனவே, அவனைத் தேடி அவள் சென்ற போது, அவளை யாரும் தடுக்கவில்லை.

சும்மா உள்ளே போகச் சொல்லிவிட்டு, அப்புறமே, அவனுக்கே அறிவித்தார்கள்.

புவனேந்திரனின் அலுவல் அறைக்குள் நளினி சென்ற போது, அங்கே 'உன்னத'த்துடைய தலைமை கணக்கரும், மூன்று தள நிர்வாகிகளும் இருந்தனர்.

எல்லோரின் முகங்களிலும் புன்னகை இருந்தது.

புவனனின் கண்களில் அவளுக்காக ஒரு தனியான பளிச்சிடல். அதைக் கண்டதும், அவளும் தன்னை மீறிப் புன்னகை செய்தாள்.

"வா, நளினி," என்று அவளை முக மலர்ச்சியுடன் வரவேற்ற புவனேந்திரன், "உன் யோசனைப்படி விற்பனைப் பொருட்களை மாற்றினோம், அல்லவா? இந்த மாத விற்பனை வெகுவாகக் கூடியிருக்கிறது!" என்று அவளிடம் தெரிவித்துவிட்டு, மீண்டும் மற்றவர்களிடம் திரும்பினான்.

"ஓகே, சார்! நீங்கள் மூவரும் எந்தெந்தப் பொருட்களில் விற்பனை அதிகமாகி இருக்கிறது என்று ஒரு கணக்கு எடுத்து எனக்கு அனுப்புங்கள். வாடிக்கையாளர்களைக் கவனிப்பதற்கு இன்னும் அதிக ஆட்கள் வேண்டும் என்றால், அதைப் பற்றியும் விவரம் கொடுங்கள். கணக்கர் சார், சென்ற மாத வரவு செலவு பற்றித் தெளிவான ரிப்போர்ட் ஒன்று வேண்டும். இதே போலத் தொடர்ந்தால், தீபாவளிப் போனஸை அதிகமாகக் கொடுக்கலாம், பாருங்கள். இனி அவரவர் இடத்துக்குப் போய், இந்த வேலைகளைப் பார்க்கிறீர்களா?"

அவள் வந்ததும் அனுப்புவது போலத் தோன்றாமல், நால்வரும் சிரித்த முகமாகவே, அவரவருக்கு அளிக்கப்பட்ட வேலைகளைக் கவனிக்கக் கிளம்பும்படி செய்து விட்டானே!

அவன் சொன்ன 'போன'சால் வந்த மலர்ச்சியா?

மற்றபடி, அந்த மூன்று பெரியவர்களும் நளினியின் யோசனை என்பதை எப்படி ஏற்பார்கள்? அவர்களிடம் அவள் முட்டிக் கொண்டதும், அவர்கள் மிரட்டியதும் எப்படி மறக்கும்?

அல்லது, விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுக்கே உற்சாகம் வந்து விட்டதா?

கணக்கரும் சென்று, அவர் பின்னே கதவு மூடிக் கொண்ட பிறகு, "எல்லோரும் போயாயிற்று. இப்போது சொல். என்னம்மா, என்ன பிரச்சனை?" என்று கேட்டான் அவன்.

பிரச்சனை என்ன? யார் சொன்னது? என்ற கேள்வி தொண்டை வரை வந்து அடங்கியது.

பதிலாக, ஓடி ஓடி வருகிறவன் நான் தானே என்று அவன் சல்லாபிப்பதைக் கேட்டு மயங்கும் மனநிலை அப்போது அவளுக்கு இல்லை.

அத்தோடு, எல்லோரும் போயாயிற்று என்று அவன் சொன்னதே, இருவரின் எண்ணப் போக்குகளுக்கும் இடையே உள்ள இடைவெளியின் அளவை எடுத்துக் காட்டுவதைப் போல இருந்தது அவளுக்கு.

ஏனெனில், அந்த அறையில் நடப்பன எதிலும் சம்பந்தப்படாமல் ஒதுங்கி, அந்தப் பெரிய அறையின் இரு மூலைகளில் முத்துவும், திருமயனும் இப்போதும் நின்று கொண்டுதான் இருந்தனர்.

அவர்கள் இருவரும் அங்கே இருக்கையில், எல்லோரும் போயாயிற்று என்று எப்படிச் சொல்ல முடியும்?

அவனால் முடிந்தது.

ஆனால், அவளால் ஒரு போதும் முடியாதே.

இப்படி அடிப்படையே தவறாக இருக்கிறதே.

அத்தோடு, அவள் பேச வந்த விஷயத்தை, இவர்களை வைத்துக் கொண்டு சொல்லவும் முடியாது.

"தயவு பண்ணிக் கிண்டலாக எதுவும் பேசாதீர்கள், புவனன். நான் உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். நிஜமாகவே தனியாக," என்றாள் மெல்லிய குரலில்.

என்ன தான் மென்குரலில் பேசினாலும், காவலர்கள் காதிலும் விழுந்து தான் இருக்கும்.

எனவே, புவனேந்திரன் நிமிர்ந்து பார்த்ததும், அவர்கள் இருவரும் அறை வாயிலை நோக்கி நகர்ந்தனர்.

"நாங்கள் கதவின் அருகிலேயே நிற்கிறோம் சார்," என்று முத்து கூற, இருவரும் வெளியே சென்றனர்.

சாத்தியிருந்த கதவை ஒரு தரம் பார்த்துவிட்டுப் புவனேந்திரன் நளினியிடம் திரும்பினான்.

இது போலப் பிறர் தவறாக ஊகிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில், இருவருமே கவனமாகத்தான் இருப்பது. ஆனால், அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இன்றைக்கு நளினி இல்லை என்பது அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

எனவே, தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, அன்போடு அவளது கைகளைப் பற்றி உட்கார வைத்து, பிரச்சனை என்னவென்று புவனேந்திரன் மறுபடியும் வினவினான்.

நளினி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். "எனக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?"

"நிச்சயமாய்! சக்திவேலும், கண்ணனும் கிட்டத்தட்ட முத்து, திருமயனுக்குச் சமமானவர்கள் என்று பாதுகாப்புக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்தில் சொன்னார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஏன்? வேலையில் ஏதேனும் ஓட்டை விட்டார்களா? என்ன செய்தார்கள்? சொல்லு உடனே. ஆளை மாற்றி விடலாம்," என்றான் அவன் சட்டென மூண்ட கோபத்துடன்.

உச்சுக் கொட்டினாள் நளினி. "நான் ஆளே வேண்டாம் என்கிறேன், நீங்கள் ஆளை மாற்றுவது பற்றிப் பேசுகிறீர்களே," என்றாள் எரிச்சலோடு.

"ஆள் வேண்டாமா? என்ன உளறல் இது?"

"உளறல் ஒன்றும் இல்லை. இவ்வளவு காலம், இருபத்திரண்டு வருஷமாக, இந்த மாதிரிப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் தான் வாழ்ந்திருக்கிறேன். எனக்கு எதுவுமே ஆனதில்லை. இப்போது மட்டும் எதற்கு?" என்றாள் நளினி, பிடிவாதமான குரலில்.

"உனக்கு விஷயம் புரியவில்லை, நளினி," என்றான் புவனேந்திரன். "இப்போது, நான் தற்பெருமை பேசுவதாக நினைத்துக் கொள்ள மாட்டாய் என்று நம்புகிறேன். இதுவரை நீ வாழ்ந்த விதம் வேறு! எத்தனையோ லட்சக் கணக்கான பெண்களில் ஒருத்தியாக இருந்தாய். அழகிலும், சாதுரியத்திலும் மேம்பட்டிருந்தாலும், பலருள் ஒருத்தியே! ஆனால், இப்போது அப்படியல்ல..."

"ஏன் திடீரென்று எனக்குக் கொம்பு கிம்பு முளைத்து விட்டதா?" என்று கிண்டலாகக் கேட்டுத் தொட்டுப் பார்த்து விட்டு, "இல்லையே!" என்று உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

புன்னகைத்துவிட்டு, "இது கண்ணுக்குத் தெரியாத கொம்பு. புவனேந்திரனுடைய மனைவி, அதாவது மனைவி ஆகப் போகிறவள் என்கிற கொம்பு!" என்றான் அவன் சிறு வருத்தமும் கேலியும் கலந்த குரலில்.

அவனது வார்த்தைகள் சித்தரித்த நிலைமை மனதிற்கு ஆனந்தமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சியில், முன்னிருக்கும் பிரச்னையை மறந்து விடக்கூடாதே. அதுவும், அப்படி மறக்கடிப்பதில் அவன் வல்லுனனும் கூட!

யோசிக்கும் பாவனையில் புருவம் சுருக்கி, "புவனேந்திரனுடைய மனைவிக்குக் கொம்பு இருந்தே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்?" என்று கேட்டாள் நளினி.

"புவனேந்திரன் ஒரு பணக்காரன்."

"இருக்கட்டுமே. அப்போதும், உங்கள் வார்த்தைகளையே சொல்வதானால், நீங்களும் பணக்காரப் 'பலருள் ஒருவர்' தானே?"

சற்று தயங்கி, "ஆனால், ஆபத்து நேரக் கூடிய வாய்ப்பு அதிகம் உண்டம்மா!" என்றான் அவன் புரியாத குழந்தைக்குச் சொல்வது போல.

"என்ன பெரிய ஆபத்து? எதுவானாலும் நாமாகச் சமாளிக்க வேண்டியதுதானே? நான் ஒன்றும் தண்ணீர் பட்டால் கரையும் உப்பல்ல. ஓர் ஆபத்தில் சிக்கினால் மீள முடியாமல் அழிந்து போவதற்கு."

கண்கள் பளிச்சிட, "நீ வெறும் உப்புக்கல் அல்ல, கண்மணி. உலகிலேயே விலை உயர்ந்த வைரக் கல் அல்லவா?" என்றான் புவனேந்திரன், பெருமிதக் குரலில்.

முகம் சுளித்த போதும், "அது உங்களுக்குத்தானே? மற்றவர்களுக்கோ, வெறும் உப்புக்கல்லாகக் கூட நான் பயன்பட மாட்டேன். அந்தப் பெறுமானம் கூட இல்லாதவள் தானே? அப்புறம் எதற்கு இந்தப் பாதுகாப்பு, பந்தா எல்லாம்?" என்று விடாமல் கேட்டாள் அவள்.

தொடர்ந்து அந்த அறையில் ஓர் அமைதியற்ற அமைதி நிலவியது.

பிறகு, "இது பந்தா அல்ல. பாதுகாப்பு மட்டுமே. எனக்காக, என் நிம்மதிக்காக, இந்தப் பாதுகாப்பை நீ சகித்துக் கொள்ளக் கூடாதா?" என்று இதமாகவே கேட்டான் அவன்.

ஒரு கணம் தயங்கினாலும், "இதே போல, என் நிம்மதிக்காக விட்டு விடக் கூடாதா என்று, நானும் கேட்கலாம் அல்லவா? எங்கள் வீட்டுச் சுற்றுப்புறம் பார்த்தீர்கள், அல்லவா? இயல்பான, சாதாரணமான வாழ்க்கை. அந்த இடத்தில், இப்படிப் பழைய கால ராஜ பரம்பரை போல, முன்னும் பின்னும் பாதுகாவலுக்கு ஆட்களோடு நடமாடுவது என்றால், அது கொஞ்சம்... கொஞ்சமென்ன, ரொம்பவே 'அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிற' விதமாகத் தோன்றாதா? தோழமையோடு பழகுகிற யார் முகத்தை நான் நிமிர்ந்து பார்க்க முடியும்? நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் போயிருந்த இத்தனை நாட்களும், நான் கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே சிறையிருந்த மாதிரிதான் இருந்தேன், தெரியுமா?" என்று வாழைப்பழத்தில் ஊசியாய், அவன் சொல்லாமல் சென்றதையும் குறிப்பிட்டாள் நளினி.

ஊசி குத்திற்றோ இல்லையோ, அதை அவன் கவனித்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. "நீ பத்திரமாய் இருக்கிறாய் என்பது, மற்ற எதையும் விட, எனக்கு முக்கியம், நளினி. அதற்காகச் சில சங்கடங்களை நாம் சகித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், முதலில் தான் அவை சங்கடங்களாகத் தோன்றும். விரைவிலேயே, என்னைப் போல, உனக்கும் பழகிப் போய் விடும்," என்று அதிலேயே நின்றான் புவனேந்திரன்.

விட்டுக் கொடுக்க அவளுக்கும் மனமில்லை. அவனையுமே இந்தப் பைத்தியக்காரத்தனத்தை விட வைக்க விரும்புகிறவள் ஆயிற்றே.

அதனாலே, "சும்மாவே, நான் பத்திரமாகத்தான் இருப்பேன் என்கிற போது, அனாவசியமாக இந்தச் சங்கடங்களை ஏன் சகிக்க வேண்டும்? தேவையே இல்லை," என்றாள் அழுத்தமாகவே.

மீண்டும் ஒரு மௌனம் அவர்களிடையே நிலவியது.

சற்றுப் பொறுத்து, ஒரு நீண்ட பெருமூச்சின் பின் புவனேந்திரன் பேசினான்.

"ரதி எப்படி இறந்தாள் என்று, உனக்குத் தெரியாதில்லையா?" என்று மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டு நிறுத்தினான்.

ரதி! அவனுடைய முதல் மனைவி.

திடுக்கிட்டு, நளினி அவனைப் பார்த்தாள்.