» காக்கும் இமை நானுனக்கு 2

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

"ஹிஹி! பாருங்கள் சார், முதலாளியான உங்களைப் போய்த் திருடன் என்று எண்ணி விட்டாள், இந்த முட்டாள் பெண். உங்களை என்னமாய் அவமானப்படுத்தி விட்டாள்! இவளை வேலையில் அமர்த்தியதே தப்பு."

"ஆமாம் சார். எப்போதும் ஒரே அதிகப் பிரசங்கித்தனம். இதைப் பண்ணு... அதைச் செய் என்று. நம் பாரம்பரியமே புரியாத படு முட்டாள்!" என்றவர் ஞானப்பிரகாசம், அடுத்த நிர்வாகி.

"முதலில், இவளை வெளியே துரத்த வேண்டும்" என்று முடித்தார் மூன்றாமவர்.

அதுதான் நடக்கப் போகிறது என்று எண்ணினாள் நளினி.

நியாயப்படி பார்த்தால், முதலாளி யார் என்று அறிந்திராதது மட்டும் தான் அவளது குற்றம். ஆனால், எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக, இரண்டு கூட்டாளிகளோடு இருந்த அவனைத் தன்னந்தனியாளாக, எப்படிப் பிடித்தாள்.

அதைப் பற்றி, எண்ணிப் பார்க்கக் கூட, யாருக்கும் மனமே இல்லையே.

ஆனால், இதைப் பற்றி வருத்தப்படுவதை விட, இனி என்ன என்று யோசிப்பது நல்லது.

அவள் யோசனையைத் தொடங்கு முன், 'சின்னப் பயல்' என்று, அந்தப் பழம் பெருச்சாளிகளால் அடிக்கடி குறிப்பிடப்படும் அந்த வளாகத்துடைய புதிய உரிமைக்காரன் செயல்படத் தொடங்கினான்.

பெயர் கூடப் பெத்த பெயர்தான். புவனேந்திரன்.

"கீழே தானே ஆலோசனை அறை? அங்கே போகலாம்" என்று எல்லோரையும் அங்கே அழைத்துச் சென்றான்.

அறையை அடைந்ததும், "அந்தப் பெண்ணை வெளியே இருக்கச் சொல்லுங்கள்," என்று நளினியை மட்டும் நிறுத்தி விட்டு, நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரி, அவனோடு வந்தவர்கள் என்று மற்ற அனைவரையும் கூட்டிக் கொண்டு உள்ளே போய்விட்டான்.

பூட்டிய அறைக்கு வெளியே, சற்று தொலைவில் ஒதுக்கமாக அமர்ந்திருந்த நளினிக்கு, நேரம் ஆக ஆக, வேலையில் நீடிப்பது பற்றிக் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும், காற்றில் இட்ட கற்பூரமாய்க் கரைந்து மறைந்து போனது.

முதலாளியின் மனநிலையைப் பிரதிபலிப்பவர்கள் பணியாளர்கள். அதிலும், கடைநிலை வேலையாட்களிடம் அது நன்றாகவே தெரியும்.

அதிகப்படி இருக்கைகள், தண்ணீர் போன்றவற்றுடன் ஆலோசனை அறைக்குள் சென்று வந்தவர்கள், அவளது பக்கமாகத் திரும்பியே பாராமல் சென்ற விதம், 'உன்னத'த்தோடு அவளுக்கு உள்ள உறவு முடியப் போவதைத் தெளிவாகவே தெரிவித்தது.

அவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும், அவளது முகத்தைப் பாராமலே, அவள் இருந்த இடத்தைக் கடந்து செல்லவும், நளினிக்குத் தன் தலைவிதி நிச்சயமாயிற்று.

சும்மாவே, மூன்று தளத்து நிர்வாகிகளுக்கும் அவளைப் பிடிக்காது!

புது முதலாளியின் ஒரு கருத்துக்காக வேலைக்கு அமர்த்தப் பட்டவள் என்பதற்காகவே, அவளை வெளியேற்றாமல் பொறுத்திருந்தார்கள்.

இப்போது வாய்ப்புக் கிடைத்திருக்கும் போது விடுவார்களா?

இன்னும் என்னென்ன கோள் சொல்லி, அவளை விரட்டப் போகிறார்களோ?

அவர்களது கோள் மூட்டலுக்குப் பதில் சொல்ல ஒரு வாய்ப்புக் கூடத் தராமல், அவளை வெளியே நிறுத்தி விட்டுப் போய்விட்டானே புதிய முதலாளி!

இதிலிருந்தே அவனது நியாய புத்தியின் தரம் தெரியவில்லையா?

நிச்சயமாக வேலை போகப் போகிறது.

இதை, இவன் கூப்பிட்டுச் சொல்லும் வரை, காத்திருப்பானேன்?

பேசாமல், எழுந்து வீட்டுக்குப் போய்விட்டால், மறுநாள் வந்து சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து வாங்கிக் கொண்டால் போகிறது.

இங்கே உட்கார்ந்து, போவோர் வருவோரின் ஒதுக்கத்தைக் கவனித்து உடல் குன்றித்தான் ஆக வேண்டும் என்று அவளுக்கு என்ன தலையெழுத்து?

ஆனால்... ஒருவேளை...

உள்ளூரத் தோன்றிய சிறு தயக்கத்தை ஒதுக்கிவிட்டு, அவள் மெல்ல எழுந்த போது, ஆலோசனை அறைக் கதவு மெதுவாகத் திறந்தது.

அவளுக்கு அழைப்போ?

யோசனையோடு பார்த்தால், கட்டடத்தின் பாதுகாவல் பொறுப்பின் பெரிய அதிகாரியான பூவலிங்கம், சோர்ந்த நடையுடன் வெளியே வந்தார்.

தனக்குப் பின்னே கதவை மெதுவாகச் சாத்திவிட்டு, நளினியை நோக்கி மெதுவாக வந்தவர், அவளை அணுகியதும், நின்று, "என்னம்மா, இப்படி என்னை மாட்டி வைத்து விட்டாயே! என்னை வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள்! இனி நான் என்ன செய்வேன்?" என்றார் வருத்தத்துடன்.

திகைப்புற்று, "உ...உங்களையா? நான் எப்படி உங்களை மாட்டி... இல்லையே, சார். நான் உங்களைப் பற்றி, யாரிடமும் எதுவும் சொன்னதே இல்லையே," என்றாள் நளினி.

"வாயால் சொன்னால்தானா? முதலாளி கைக்கடிகாரத்தை எடுத்ததை, நான் கவனித்திருக்க வேண்டுமாம்! அவரவர் வேலையை, அவரவர் ஒழுங்காய்ச் செய்ய வேண்டும். நீ செய்யவில்லை, வெளியே போ என்று ஒரேயடியாய் முடித்து விட்டார். இனி நான் என்ன பண்ணுவேன்? போன வருஷம் மகன் திருமணத்துக்கு வாங்கின கடனை மொத்தமாகப் பிடித்து விட்டால், மிச்சம் என்று கைக்கு ஒன்றுமே வராது. மகனுக்குக் கல்லூரிக்குப் பணம் கட்ட வேண்டும். அதற்காக, ஐம்பதாயிரம் அதிகப்படி கடன் கேட்டிருந்தேன். தருவதாகக் கூடச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இனி எப்படித் தருவார்கள்? என் மகனின் எதிர்காலம் என்ன ஆகும்? அதோ கதிதான். இனி என் குடும்பமே அவ்வளவு தான்!" என்று புலம்பியவாறே வெளியேறினார் அவர்.

ஒரு விரலால் கண்ணீரைச் சுண்டிவிட்டாரோ என்ற சந்தேகத்தில், நளினி துடித்துப் போனாள்.

அவளுக்கு உன்னதத்தின் புதிய முதலாளி மீது கோபம் கொதித்தெழுந்தது.

அவளாவது வேலையில் சேர்ந்து மூன்றே மாதங்கள் தான் ஆகிறது. போகிறது எனலாம்.

ஆனால் பூவலிங்கம் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணிபுரிகிறவர் ஆயிற்றே. ஒரு தரம் மன்னிப்புக் கொடுக்கக் கூடாதா? ஒரு எச்சரிக்கை?

ஒன்றுமே இல்லாமல் விரட்டுவதா?

இதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று அவள் அமர்கையில், கதவு மீண்டும் திறந்து, நிர்வாகிகள் மூவரும் வெளியே வந்தனர்.

அவர்களது முகத்தில் இருந்த வெறுப்பும், சினமும் அவள் எதிர்பார்த்ததே! ஏளனம் தெறித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான்.

பார்வையால் கூடத் தீண்டத் தகாதவள் போல, அவளிடமிருந்து அவசரமாக விழிகளைத் திருப்பிக் கொண்டு, மூவருமே வேகமாகச் செல்வதை வெறித்தபடி உட்கார்ந்திர