» காக்கும் இமை நானுனக்கு 4

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

புவனேந்திரன் பேச்சில் காரண காரியம் சரியான விகிதத்தில் இருந்தது.

எனவே, அது பற்றிப் பாராட்டத்தான் வேண்டும்.

அத்தோடு, பூவலிங்கத்தின் துன்பம் தீர்ந்தது என்று, அது வேறு ஒரு பெரிய நன்மை விளைந்திருப்பது, இன்னமும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ஆனால், ஏதோ எதிர்பார்த்தது நடவாத ஏமாற்றம், அவளுள் ஏன் வந்தது?

ஒரு வேளை, அவள் சொன்னதற்காகவென்று புவனேந்திரன் பூவலிங்கத்துக்கு வேலை கொடுக்கவில்லை என்பதாலா?

என்ன பைத்தியக்காரத்தனம்!

இவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவன், வெறும் மூன்று மாதங்களுக்கு முன்பாக, அங்கே வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண்ணின் பேச்சுக்காக மட்டுமாய்ச் செயல்படுவான் என்று அவள் எதிர்பார்த்தால், அது முட்டாள்தனம் அல்லவா?

இந்த மாதிரி அசட்டுத் தனங்களுக்கு இனி இடம் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்த பிறகே, அன்று அவளால் உறங்க முடிந்தது.

ஆனால் மறுநாளே, தன்னுடைய இன்னோர் அசட்டுத் தனம் நினைவு வர, அலுவலுக்குச் சற்று முன்னதாகவே கிளம்பிச் சென்றாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, புவனேந்திரனும் முன்னதாகவே வந்து கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே சென்றவள், அவனிடம் தன் வேலையைப் பற்றிக் கேட்டாள்.

பூவலிங்கத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசிய வேகத்தில் விட்ட வேலை. இப்போது, அவருக்கே வேலை மீண்டும் கிடைத்து விட்ட போது, அவளை எப்படி வெளியேற்றுவான்?

அவனும் அதையேதான் சொன்னான்.

"பூவலிங்கத்தின் வேலைக்காகப் பேசிய வேகத்தில்தானே, உன் வேலையையே விட்டாய். அவருக்கே வேலை கிடைத்து விட்ட பிறகு, உன் வேலை எப்படிப் போகும்? இடையில் நடந்ததை - எல்லாவற்றையுமே ரப்பரால் அழித்த மாதிரி - அடியோடு மறந்து விடு," என்றான் அவன்.

அவனது 'எல்லாவற்றையுமே' ஒன்றை உணர்த்த, "அவருக்கு வேலையைக் கொடுப்பதாக முடிவு பண்ணி விட்டு, என்...என்னிடம் ஏன் அப்படிக் கேட்டீர்கள்?" என்று உள்ளூர எரிச்சலுடன் வினவினாள் அவள்.

"உன்னைப் பற்றி மதிப்பிட முயன்றேன் என்று வைத்துக் கொள்ளேன்," என்று சிறு இறுக்கத்துடன் கூறி முறுவலித்தவன், அடுத்து, "ஆனால், இனியேனும் எதற்கும் அவசரப்பட்டுப் பேசாமல், இந்த இடத்துடைய அடுத்த உரிமையாளரிடம் நல்ல பெயர் வாங்கு," என்று ஆலோசனை என்ற பெயரில், அவளை அதிர வைத்தான்.

நிஜமாகவே நளினிக்குப் பேரதிர்ச்சிதான்.

தூக்கிவாரிப் போட, திகைப்புடன் அவனை நோக்கி, "எ...எ... என்ன சொன்னீர்கள், சார்? அடு...த்த உரிமையாளரா? ஏன்? நீங்கள்தானே உரிமைக்காரர்...? வேறு யார்?" என்று உளறிக் குழறி வினவினாள்.

"இப்போதைக்கு என்னுடையதுதான். ஆனால், நான் இதை விற்று விடும்போது?"

"விற்பதா? ஏன்? இப்போதுதானே உங்கள் கைக்கு வந்தது? அதற்குள் எதற்காக விற்பது?" என்று வியப்பும் கோபமுமாக மீண்டும் வினவினாள் அவள்.

அவனிடம் பணிபுரிகிறவள் என்கையில், இந்தக் கேள்வி அதிகப்பிரசங்கித்தனம்தான். ரொம்பவே. ஆனாலும், அவளால் கேளாதிருக்க முடியவில்லை.

லேசாகப் புருவங்களை உயர்த்திய போதும், நல்ல வேளையாக, அவனும் அவளைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் பதில் சொன்னான்.

"நான் தொழில் நடத்துகிறவன், நளினி. லாப நஷ்டக் கணக்குப் பாராமல் எந்தத் தொழிலிலும் வெற்றி பெற முடியாது. 'உன்னத'த்தில் முடங்கிக் கிடக்கும் பணத்துக்கு லாபம் போதாது. கிட்டத்தட்ட லாபமே இல்லை என்றே சொல்லலாம்."


இவனுடைய பாட்டியம்மாவைப் போல, இவன் கௌரவத்துக்கு இந்த வளாகத்தை நடத்தவில்லை. சரிதான். ஆனால் விட்டுவிட எண்ணுவதன் காரணமும் சரியில்லையே. லாபம் ஏன் இல்லை என்று யோசிப்பதை விட்டு...

எரிச்சலோடு, "லாபம் எப்படியிருக்கும்?" என்று வெடித்தாள் நளினி. "லாபம் வருவதற்குக் கடையில் விற்பனையும் நடக்க வேண்டுமல்லவா? இந்த மாதிரி மகாராஜாக்களுக்கு மட்டும் கடை நடத்தினால், அதுவும் மகாராஜாக்களே இல்லாத இந்தக் காலத்தில் நடத்தினால், விற்பனை எங்கே நடக்கும்? லாபம் தான் எப்படி வரும்?" என்றாள்.

நிச்சயமாக அதிகப்படியான பேச்சுதான். ஆனால், அவன் எப்படி இதை விட்டுப் போகலாம் என்ற ஆத்திரத்தை அவளால் அடக்க முடியவில்லை. அதுவும், சீர் செய்யக்கூடிய ஒன்றைச் செய்து பாராமலே வெளியேறுவதா?

கண்ணில் சிரிப்புடன், "தலையில் கிரீடம் தரித்தால்தான் மகாராஜாவா? ரிலையன்ஸ், விப்ரோ, டாடா உரிமையாளர்களை எல்லாம் என்ன பெயர் சொல்லிக் கூப்பிடுவாயாம்?" என்று கேட்டான் அவன்.

"மன்னர்களுக்கு நிகரான பணக்காரர்கள்தான். ஆனால் அவர்கள் எத்தனை பேர்? விரல்விட்டு எண்ணுகிற அளவு தானே! அப்படியிருக்கும் ஒரு சிலருக்காக மட்டும்தான் கடை நடத்த வேண்டுமா?"

"பின்னே? நடைபாதையில் குவித்துப் போட்டு விற்பார்களே, அதுபோலச் செய்ய வேண்டும் என்கிறாயா?"

"இது அல்லது, அதுதானா? இரண்டுக்கும் நடுவே, மத்திய தரம் என்று ஒன்றும் கிடையாதா? அத்தோடு, இப்போதெல்லாம் நீங்கள் சொல்லுகிற ராஜாக்கள் குடும்பத்தாரே, எப்போதுமே, தகதகவென்று அணிந்து கொண்டிருப்பதில்லை, தெரியுமா? என்னோடு படித்தவள் ஒருத்தி, அவளது பிறந்த நாளைக்கு அவளைச் சுற்றுகிற பன்னிரண்டு பேருக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தாள். அவள் அடிக்கடி அணிகிற உடை என்ன தெரியுமா? ஜீன்ஸ் பேன்ட்டும், டாப்ஸும்தான். விலை உயர்ந்ததும் இருக்கும். ஆனால், நீங்கள் இளக்காரமாகச் சொன்னீர்களே, அது போல நடைபாதைக் கடைகளில் அவள் பீராய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்! அவளுக்குப் பொருந்துவதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளுக்கு முக்கியம். அப்படித்தான் இப்போது எல்லோருமே பார்ப்பது."

"அப்படிப் பார்த்து வாங்க, இங்கே எதுவும் இல்லை என்கிறாயா?"

"பார்ப்பதற்கு இருந்து என்ன செய்வது? வாங்கக் கூடிய விலையில் இருக்க வேண்டுமே! இங்கே ஜவுளிப் பிரிவில், நான் வந்த நாளிலிருந்து ஒரு செட் துப்பட்டா துணிகளை நான் பார்த்து வருகிறேன். அவற்றில், ஒரு பீஸ் கூட விற்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால், விலை என்ன தெரியுமா? மீட்டர் ஆயிரத்து இருநூறு ரூபாய். இரண்டரை மீட்டர் என்றால், ஒரு துப்பட்டாவுக்கே, மூவாயிரம் ரூபாய் ஆகிவிடும். துப்பட்டாவுக்கே அவ்வளவு என்றால் அதற்குப் பொருத்தமான ஒரு சுரிதார் செட்டுக்கு, ஆரேழு ஆயிரங்களாவது ஆகும். இதே துப்பட்டாத் துணியை என்னிடம் கொடுத்தால் அந்த இரண்டரை மீட்டரில், லைனிங் கொடுத்து, அருமையான ஒரு சல்வாரையே தைத்துவிடுவேன். எந்தக் கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்திற்கும் அணிந்து செல்லக் கூடிய மாதிரியாய்ப் பிரமாதமாக இருக்கும். அதுபோல சல்வார் செட்டே கிடைக்கிறது. அப்படியிருக்க, ஒரு துப்பட்டாவுக்கு இந்த விலை கொடுத்து யார் வாங்குவார்கள்?" என்று, இந்த மூன்று மாத காலமாக அவள் எண்ணியதையெல்லாம், வேகமாகப் புவனேந்திரனிடம் கொட்டி முடித்தாள் நளினி.

அவன் குறுக்கிட, அவள் இடமே கொடுக்கவில்லை!

அவன் குறுக்கிட விரும்பியதாகவும் தெரியவில்லை.

புவனேந்திரன் யோசிப்பது போலத் தோன்றவும், தன் கருத்துக்களை மேலும் வலியுறுத்த விரும்பி, "பெரிய பெரிய பணக்காரர்கள் கூட, இப்போதெல்லாம் வீட்டில், உடல் சுகத்தைப் பார்த்துப் பருத்தி நூல் துணிகளைத்தான் அணிகிறார்கள் சார். எப்போதும் பட்டுத்தான் என்று பந்தாக் காட்டுகிற காலம், எப்போதோ முடிந்து விட்டது. என்ன, இவர்கள் ஒரு நாலு தரம் கட்டி விட்டுத் தூர வீசுவார்கள். மற்றவர்கள், கூடப் பத்துத் தடவை உடுத்துப் பழசான பிறகு, பாத்திரக்காரனுக்குப் போடுவார்கள். அவ்வளவுதான் சார், வித்தியாசம்," என்று மேலும் அடுக்கினாள்.

லேசாக முறுவலித்து, "நீ வேலை செய்ய வேண்டியது, விற்பனைப் பிரிவில் என்று தோன்றுகிறது. வாங்கப் பிடிக்கிறதோ, இல்லையோ, சுற்றி வளைத்துப் பேசி, நிச்சயமாகத் தலையில் கட்டி விடுவாய்," என்றான் அவன்.


"நான் சும்மா சொல்லவில்லை சார். ஒரு தரம் என்னோடு வந்து பாருங்கள், உங்களுக்கே புரியும்," என்றாள் அவள்.

அவன் பேசாதிருக்கவும், "அவசரப்பட்டு 'உன்னத'த்தை விற்று விட மாட்டீர்களே, சார்?" என்று கவலையுடன் கேட்டாள் நளினி.

அவன் பேசாதிருக்கவும் கலங்கி, "சார், இது உங்கள் தாத்தாவுடைய தந்தை தொடங்கியதாமே! அவருக்குப் பிறகு, உங்கள் தாத்தா பாட்டி தொடர்ந்து நடத்தியது. எழுபது ஆண்டுகளுக்கும் அதிகமாக, வெகு கம்பீரமாக நடந்து வருவது. விரைவில் வைர விழாவைக் கொண்டாடலாம். இப்படி ஒரு நிறுவனம், தொடர்ந்து நாலாவது தலைமுறையாக உங்களிடம் இருப்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அதைப் போய் விற்பதா?" அவனது மனதைத் தொட முயன்றாள் நளினி.

"இப்போதுதான், பாட்டி நடத்திய விதத்தைத் தொடர்வது சரியில்லை என்று வாதாடினாய். உடனேயே, பாரம்பரியத்தை விடலாமா என்று கேட்கிறாயே?"

ஒரு கணம் திகைத்துவிட்டு, "பாருங்கள் சார், உங்கள் கொள்ளுத் தாத்தாவின் உடை போலவா, நீங்கள் அணிகிறீர்கள்? அவருடைய பேரனான நீங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாறவில்லையா? அதைப் போலக் கடையில் உள்ள பொருட்களை, இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றபடி, மாற்றலாமே என்றேன். நீங்களானால், வழிவழியாய் வந்த குடும்பச் சொத்தையே விற்கப் போகிறேன் என்கிறீர்களே, சார்," என்றாள் அவள்.

"வழிவழியாய் வந்த குடும்பச் சொத்தா? அப்படி என் கைக்கு வந்த இந்தக் குடும்பத்துச் சொத்தை நான் விரும்புவேன் என்று உனக்கு என்னம்மா, நிச்சயம்?"

புவனேந்திரனின் குரலில் லேசாக வெளிப்பட்ட கைப்பு, பூவலிங்கத்தின் பேச்சை நினைவுறுத்த, நளினிக்குச் சுரீலென்றது.

வழி வழியாக என்றால், அவனுடைய தந்தைக்கு இந்த 'உன்னதம்' கிடைக்கவில்லையே!

அவனுடைய பெற்றோரை ஒதுக்கிய பாட்டி வேறு வாரிசு இல்லாததால் மட்டுமே, அவனிடம் கொடுத்த சொத்தின் மீது, அவனுக்கு எப்படி ஈடுபாடு வரும்?

அந்த வெறுப்பும் சேர்ந்ததால் தான், இலகுவாக விற்றுவிட முடிவு செய்தானோ?

அப்படியானால், விற்றுவிட்டுப் போயே விடுவானா?

அவசரமாக யோசித்து, "ஆனாலும், ஒரு தொழிலை மிகவும் வெற்றிகரமாக நடத்த வாய்ப்பு இருக்கும் போது, அதை முயன்று பாராமலே விட்டு விடுவீர்களா? பெரிதாகத் தொழில் நடத்துகிறவன் என்று சொல்லிக் கொண்டீர்களே. ஒரு தடவை, ஒரே ஒரு தடவை என்னோடு வந்து பாருங்கள், சார். நான் சொல்லுகிற மாதிரித் துணிகளில் விற்கிற இடங்களில் கூட்டம் எப்படி அலை மோதுகிறது என்று நீங்கள் நேரில் பாருங்கள், அப்போதுதான், நான் சொல்வது உங்களுக்குப் புரியும்," என்றாள் அவள் - குரலில் சிறு மன்றாடலுடன்.

"ம்ம்ம்..." என்று புவனேந்திரன் யோசிக்கும் போதே, "கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குப் போக வேண்டாம் சார்," என்றான் அவனுடைய காவலர்களுள் ஒருவன்.

"ஆமாம் சார். அவர்கள் சொல்கிற மாதிரி, கூட்டம் அலை மோதுகிற இடங்களில், கண்டபடி மேலே வந்து விழுவார்கள், சார். அவர்களை யார் என்ன என்று கண்டு ஒதுங்கவோ, விலக்கவோ முடியாது," என்றான் மற்றவன்.

தன் காதுகளையே நம்ப முடியாத அளவுக்கு, நளினிகு ஆச்சரியமாகிப் போயிற்று.

உத்தமப் பெண்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் கூட, கூட்ட நெரிசல்களில் மேலே இடிப்பவர்களைச் சிறு எரிச்சலோடு அலட்சியப்படுத்துகிற காலம் இது! ஆண் பிள்ளையான இவன் மீது அடுத்தவர்கள் பட்டு விடுவார்களே என்று, அங்கே போகாதே, இங்கே செல்லாதே என்று ஆலோசனை கூறப்படுகிறதே!

அதுவும் அவனிடம் பணிபுரிகிறவர்களே ஆலோசனை கூறுகிறார்கள்.

புவனேந்திரனும், அதை ஏற்று, அது பற்றிச் சிந்திப்பதாகவும் தோன்றவே, அவளுக்கு இன்னமும் ஆச்சரியமாகிப் போயிற்று!

இந்தப் பாதுகாவலர்கள், இந்த ஆலோசனை, சிந்தனை ஏன்?

ஆனால், அதைப் பற்றி விசாரிப்பதை விட முக்கியமாக விஷயம் வேறு இருக்கிறது. நூலையும், துணியையும் மொத்த உற்பத்தி செய்கிறவனுக்குப் பொருட்களின் சில்லறை விற்பனை பற்றிக் கற்றுக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.

எனவே அவனுக்குச் சரியாக, "சரி சார். கூட்ட நேரத்தில் போக வேண்டாம். காலை பத்து மணிக்குப் போனால், எந்தக் கடையிலும் கூட்டமே இராது. நாளை காலை வாருங்கள், போய்ப் பார்க்கலாம்," என்று அழைத்தாள்.

"மறதி, மறதி. நாளை ஞாயிற்றுக்கிழமைம்மா. கடைகள் மூடியிருக்குமே."

"ஒன்றும் மறக்கவில்லை. உங்கள் 'உன்னதம்' மட்டும் தான், பழைய காலத்து வழக்கப்படி, ஞாயிற்றுக்கிழமை மூடியிருப்பது. இப்போதெல்லாம், பெரும்பாலும் ஆண் பெண் இருவருமே வேலை செய்து சம்பாதிப்பதால், 'சண்டே ஷாப்பிங்' என்று, ஞாயிறன்றுதான் கடைகளில் அதிக விற்பனை. ஆனால், வாரம் முழுவதும் வேலை செய்த இறுக்கம் தளரக் காலையில் சற்று ஓய்வாக வீட்டில் இருந்துவிட்டுத் தாமதமாகக் கிளம்புவார்கள். அதனால் தான், காலையில் கூட்டமிராது."

சற்று வியப்புடன் அவளைப் பார்த்தான் அவன். "நிறையத் தெரிந்து வைத்திருக்கிறாயே," என்றான் பாராட்டுதலாக. "அங்கே எல்லாம் உற்பத்தித் துறையில் இருப்பதால், இது போன்ற விவரங்கள் புதிதாக இருக்கிறது!"

வாயால் ஒன்றும் சொல்லாவிட்டாலும், அவனது உடை, பெல்ட் போன்றவற்றை, ஒரு தரம் பாராதிருக்க நளினியால் முடியவில்லை.

அதைக் கவனித்து, "உடை, என் வீட்டுக்கு வந்து, அளவெடுத்துத் தைத்து வருவது. அவர்களே பொருத்தமாக மற்றவற்றையும் கொண்டு வந்து விடுவார்கள். கொஞ்சம் அதிகச் செலவாகும். ஆனால், இவற்றுக்காக நான் வெளியே அலைந்து திரிய நேராது," என்று அவனது வழக்கமான சிறு முறுவலுடன் கூறினான் அவன்.

வெளியே அலைந்து திரிய நேராதிருப்பதற்காக, அதிகம் செலவு செய்கிறானா? நாலு பொருட்களைப் பார்த்து, நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுப்பதே ஒரு சுகம் என்று இவனுக்குத் தெரியாதா? நேரம் இல்லையா? பிடிக்கவில்லையா? அல்லது...

மீண்டும் நளினிக்கு ஏதோ உறுத்தியது. என்னவென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று.

பலமுறை யோசித்தும், அது என்னவென்று, நளினிக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால், மறுநாள் குறிப்பிட்ட இடத்தில், புவனேந்திரன் அவளுக்காகக் காத்து நிற்பதைப் பார்த்தபோதோ, உறுத்தல் பற்றிய நினைவே மறந்து போயிற்று.

Advertisement