» காக்கும் இமை நானுனக்கு 6

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

ஏதோ ஒரு வகையில், புவனேந்திரன் தன்னை அவமதித்து விலக்கி விட்டாற்போல உணர்ந்து, நளினி தவிக்கக் காரணம் இருந்தது.

அவன் வந்த அந்த மூன்று வாரங்களில், முதல் வாரம் மட்டும்தான், அவன் வார நாட்களில் மட்டுமாக வந்தது. மற்ற இரு முறையும், வியாழன் அல்லது வெள்ளியன்று வந்து, ஞாயிறு முடியச் சென்னையிலேயே இருந்துவிட்டுப் போனான்.

வார நாட்களில், மதிய உணவு இடைவேளைகளில், வேலை செய்தனர். ஆனால், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை தொடங்கி, மாலை வரை வேலை நடந்தது.

சின்ன வயதாகத் தோன்றுகிறானே, மெய்யாகவே, வேலை தான் இவனது நோக்கமா என்று சற்றுக் கவலைப்பட்ட சகுந்தலா கூட, வேலை நடந்த வேகத்தைப் பார்த்து அதிசயித்துப் போனாள்.

இடையிடையே, காபி, குளிர் பானம் ஏதாவது கொணர்ந்து வைப்பாள். முறுக்கு, தட்டை என்று ஒரு சிற்றுண்டி அடுத்து வந்தது.

வெறும் நன்றி கூறி உண்டுவிட்டுப் போகாமல், புவனேந்திரன் சகுந்தலாவிடமும் அபிப்பிராயம் கேட்பான்.

கூடவே ஒரு பாராட்டும் இருக்கும்.

"'உப்பிட்டவரை உள்ளளவும் நினை!' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்த மாதிரி ஒரு சிறு உப்புக்கல் கூட அதிகமோ, குறைவோ இல்லாமல், இப்படி ருசியாகச் செய்து தந்தால், இந்த உயிர் இன்னொரு பிறவி எடுக்கும் போது கூட, இந்தச் சுவையை மறக்காது, ஆன்ட்டி!" என்று அவன் கூறுகையில், சகுந்தலாவுக்கு உச்சி குளிர்ந்து போகும்.

"இப்போதெல்லாம் உப்புத் தூள் தான். உப்புக் கல்லே கிடையாது," என்று மடக்கிய போதும், அந்த 'உப்புக் கல்' என்ற வார்த்தையில் நளினியின் மனம் இதமாகக் குறுகுறுக்கும்.

உப்புக்கல் என்ற வார்த்தையை வேண்டும் என்றுதான், புவனன் சொன்னானா? சொல்லும்போது, லேசாக அவளைப் பார்த்தானா?

ஞாயிற்றுக் கிழமைகளில், சேர்ந்து சாப்பிட அழைத்த போது, மறுக்காமல் அவர்களோடு அமர்ந்து ரசித்து உண்டான். அடுத்த வேளைக்கு பீட்சா, சான்ட்விச் என்று எல்லோருக்குமாக வரவழைத்தான்.

"ஐயோ, நான் பிளஸ் டூ படிக்கிறேனாக்கும்! எனக்கெல்லாம் யாரிடமும் பேச நேரமே கிடையாது!" என்று புருவத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அலையும் மஞ்சரியைக் கூட, உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேச வைத்தான்.

மொத்தத்தில் முதுகை ஒடிக்கிற அளவுக்கு வேலையும் நடந்தது. கூடவே தன் வீட்டாரோடு அவன் இணைந்து பழகிய விதத்தில், நளினிக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

கடைசித் தடவை புவனேந்திரன் வந்த போது அந்த மகிழ்ச்சியை அவள் முகத்தில் அதிகமாகக் காட்டி விட்டாளோ?

காட்டி விட்டாளோ என்ன? காட்டத்தான் செய்தாள். ஒருவரின் வரவு சந்தோஷமாக இருக்கும் போது, அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

அதிலும், அந்த நபர் அவள் வீட்டு விருந்தாளியாக வரும்போது?

அவள் சிரித்துக் கொண்டே, "லட்சம் நல்வரவு!" என்ற போது, புவனேந்திரன் பதிலுக்குச் சிரித்தபடிதான் உள்ளே வந்ததாக, அவள் அப்போது நினைத்தாள்.

ஆனால், சற்றுத் திகைத்து நின்று விட்டு, அதன் பின்னர் சமாளித்துச் சிரித்தானோ என்று இப்போது யோசித்துப் பார்க்கையில் அவளுக்குத் தோன்றியது.

ஏன்? ஒருவர் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்பதில் கூடத் திகைப்பதற்கு என்ன இருக்கிறது? அவள் ஒன்றும் அவனுடைய விரோதி இல்லையே.

மனம் எரிமலையின் மடியாய்க் குழம்பிக் குமுறிய போதும், பெற்ற தாயிடம் கூட, அவளால் அதைக் காட்டிக் கொள்ள முடியவில்லை.

"புவனேந்திரன் சாருக்கு வேறு நிறைய வேலை இருக்கிறதாம்மா! அதனால், இந்த வேலையை இவரிடம் ஒப்படைத்து இருக்கிறாராம்," என்று அறிமுகம் வேறு செய்து வைக்க வேண்டியிருந்தது.

அவளை விட ஓரிரு ஆண்டுகளே மூத்தவனான கோகுல், உடைத் தயாரிப்புக் கலையில் பெரும் பட்டங்கள் வாங்கியிருந்தான். புவனேந்திரன் எழுதியிருந்த மாதிரி, வல்லுனனாகவும் இருந்தான்.

அத்தோடு, முன்னேறும் ஆர்வமும் இருந்ததால், அவனோடு வேலை செய்வது, நளினிக்குமே, அறிவுப் பூர்வமாக ஆக்கம் அளிப்பதாகத்தான் இருந்தது. சொல்லப் போனால், எந்தெந்தத் துணி வகைகளை எந்தெந்த மாதிரித் தைத்து அணிந்தால், தோற்றம் சிறப்பாக இருக்கும் என்பதெல்லாம், புவனேந்திரனை விடவும், கோகுல் அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தான்!

அவளை விடவுமே!

கோகுலோடு வேலை செய்யத் தொடங்கிச் சிறிது நேரத்திலேயே நளினி இதைப் புரிந்து கொண்டாள். எனவே, மெய்யாகவே, செய்யும் பணி சிறப்பாக இருக்க வேண்டும் எனும் ஒரே காரணத்துக்காகவே, புவனேந்திரன் இந்தக் கோகுலை அனுப்பியிருக்கிறான் என்று, நளினி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

ஆனால், இது பற்றி 'உன்னதம்' வளாகத்தில், புவனேந்திரன் தன்னை அழைத்துச் சொல்லுவான் என்று எதிர்பார்த்து மாலையில் வேலைக்குச் சென்றவள், ரொம்பவே ஏமாந்து போனாள்.

அவனாக அவளை அழையாதது மட்டுமின்றி, அவளாக முயன்ற போதும், புவனேந்திரனை அவளால் சந்திக்க முடியவில்லை.

மறுநாளும், அதற்கு மறுநாளும் என்று அந்த முறை அவன் அங்கிருந்த அத்தனை நாட்களும் இதுவே தொடரவும், புவனேந்திரன் தன்னை வேண்டும் என்றே ஒதுக்குகிறான் என்று அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போயிற்று.

ஏன் ஏன் என்று பல்லாயிரம் முறை யோசித்து மனதை புண்ணாக்கிக் கொண்டாளே தவிர, அந்த ஒதுக்கத்தின் காரணத்தை அவளால் ஊகிக்கவே முடியவில்லை.

போகிறான் என்று அலட்சியப்படுத்தவும் முடியாமல் மிகவும் வேதனையாக இருந்தது.

அவ்வளவு தூரம் சகஜமாக, குடும்பத்துடனேயே சேர்ந்து அமர்ந்து உண்டு, பேசிச் சிரித்துப் பழகிவிட்டு, இப்போது பெரிய முதலாளியாக, ஒரு கடைநிலைப் பணியாளைப் போலப் புவனேந்திரன் தன்னை நடத்துவதை அவளால் தாங்க முடியவில்லை.

ஆனால், அவளது வீட்டுக்குப் புவனேந்திரன் வந்து, 'ஆன்ட்டி, அங்கிள்!' என்று அவளுடைய பெற்றோருடன் ஓர் உறவினனைப் போலப் பழகியது எல்லாம், அவனது வேலை நன்கு நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவா?

அவனது இடத்துக்குத் தகுதியுள்ள இன்னோர் ஆள் கிடைத்ததும், அப்படியே ஒதுங்கிக் கொண்டு விடுவானா?

எப்படி முடியும்?

அவனும் சந்தோஷமாகத்தானே பேசிச் சிரித்தான்?

அந்த சந்தோஷத்துக்காக, அவளைப் போல, அவனது மனமும் ஏங்காதா?

ஆனால், அவனுக்கெல்லாம் மனம் ஒன்று இருந்தால் தானே, ஏங்குவதற்கு?

முதலாளி அல்லவா? கொஞ்சம் சிரித்துப் பேசுவதாகக் காட்டிக் கொண்டாலே, முழு மூச்சுடன் வேலை செய்வாள் என்று கணக்கிட்டிருக்கிறான்.

அவன் எதிர்பார்த்தது போலவே, இரவு தூக்கத்தில் கூட, வண்ணங்கள், வடிவமைப்புகள், துணி வகைகளைப் பற்றியே யோசித்து யோசித்து வடிவமைத்தது அவளது முட்டாள்தனமே தவிர, அதில் அவனைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?

இந்தக் குமுறலின் ஊடே, நளினிக்குக் கோபமும் வந்தது.

அவளது வீடு என்ன, 'உன்னத'த்தின் கிளையா? அல்லது, புவனேந்திரன் அதற்குத் தனியாக வாடகை கொடுக்கிறானா? என்ன உரிமையில், அவளது வீட்டில் இந்த வேலையைச் செய்வது?

வேறு இடம் சரியாக இல்லையே என்று, ஏதோ, அவளாகத்தான் ஓர் இளக்கத்தில் இந்த ஐடியா சொன்னாள். ஆனால், அதுதான் சாக்கு என்று, அதையே நிரந்தரமாக்கி விடுவதா?

அடுத்த முறை அவன் வரும்போது, இந்த விஷயம் பற்றிப் புவனேந்திரனிடம் காரசாரமாக இல்லாவிட்டாலும், கறாராகப் பேசிவிட வேண்டும் என்று நளினி முடிவெடுத்த போது, ஒரு நாள் காலையில், நளினி வேலைக்குக் கிளம்பு முன்பாக கூரியரில் அவளுக்கு ஒரு கடிதமும், அவளுடைய தந்தைக்கு ஒரு பெரிய பார்சலும் வந்தன.

இரண்டையுமே அனுப்பியது புவனேந்திரன் தான்.

பெரிய பார்சலை அவசரமாகப் பிரித்துப் பார்த்த சகுந்தலாவும், சுதர்சனமும் வியந்து நின்றனர்.

சென்னை 'பூம்புகா'ரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களில், ஒரு பெரிய சூரியச் சக்கரத்தைப் பார்த்து ஆசைப்பட்டு விலையைக் கேட்டுவிட்டு, மிரண்டு போய் ஓடியே வந்து விட்டதாக, ஒரு தரம் நகைச்சுவை ததும்ப, அவர்கள் இருவரும் புவனேந்திரனிடம் விவரித்திருந்தனர்.

அதே சூரியச் சக்கரம் தான் பார்சலுக்குள் இருந்தது. கூடவே ஒரு சிறு கடிதமும்.

'உன்னத'த்தின் சரித்திரத்தில் ஒரு முக்கிய மாறுதலைச் செய்யப் பல்வேறு உதவிகளை அன்போடு செய்ததற்காகத் தனது நன்றியை இந்தச் சிறு அடையாளத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்வதாகப் புவனேந்திரன் கடிதத்தில் எழுதியிருந்தான்.

அவர்கள் செய்த உதவிக்கு, நேரில் வந்து நன்றி தெரிவிப்பதுதான் முறையாகும். ஆனால், கடை வளாகத்தில் சில மாற்றங்கள் செய்வதால், வேலை மிகுதி. அதனால் நேரில் வர முடியவில்லை என்று, ஒரு காரணத்தையும், அந்தப் பெரிய தலைமுறை ஏற்கும் விதமாக அவன் பதவிசாகவே எழுதியிருந்தான்.

சகுந்தலாவுக்கு மனம் உருகிப் போயிற்று.

"அருமையான மனிதர். இப்படி ஒரு பாஸ் கிடைத்தது, உன் அதிருஷ்டம்," என்றார் தந்தையும்.

"உனக்கு என்ன எழுதியிருக்கிறார்? இதே போலவா?" என்று இருவரும் கேட்க, நளினி தனக்கு வந்த கடிதத்தை நீட்டினாள்.

அவளுக்கும் கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. சில விவரங்களும்.

மாற்றம் குறித்து 'உன்னத'த்துடைய நிர்வாகிகளுக்கு அறிவித்து விட்டதாலும், அலுவலகத்திலேயே இந்தத் தேர்ந்தெடுக்கும் வேலைகளைச் செய்யத் தனியிடம் ஒன்று ஒதுக்கியிருப்பதாலும், கோகுலும், நளினியும் அங்கேயே சேர்ந்தமர்ந்து, இதே பணியை வெளிப்படையாகச் செய்யலாம் என்று தகவல் இருந்தது.

இந்த வேலை மாற்றம், நளினிக்கு ஒரு பதவி உயர்வாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

கூடவே, அதுவரையிலும் அவள் செய்த அதிகப்படி வேலைக்காக, ஒரு கணிசமான தொகைக்கான ஒரு காசோலையும்.

பதவி உயர்வு, பரிசு என்று பெற்றவர்கள் மகிழ்ச்சியில் பூரிக்க, எதையும் ஒத்துக் கொள்ளப் பிடிக்காமல், அதே சமயம் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவும் முடியாமல், நளினி உள்ளூரக் குமுறினாள்.

காட்டிக் கொள்வது இருக்கட்டும், அவளுக்கே, தான் என்ன விரும்புகிறோம் என்று தெளிவாகப் புரியாத நிலை.

பணம் கொடுத்து, ஒரு வல்லுனனின் உழைப்பை வாங்கக் கூடிய நிலையில் உள்ளவன், அவனது மற்ற வேலைகளுக்கு இடையில், இதையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டே இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், புவனேந்திரன் இப்படித் திடுமென வெட்டிக் கொண்டது, அவளுக்குப் பிடிக்கவில்லை.

அத்தோடு, அவள் செய்த உதவிக்கு அவன் விலை போட்டுப் பணம் அனுப்பியது, என்னவோ, அவளை அவமானப்படுத்தி விட்டது போல, அவளுக்கு ஆத்திர மூட்டியது.

அவள் என்ன, பணத்துக்காகவா இந்த அதிகப்படி வேலையைச் செய்தாள்?

எண்ணப் போக்கில் தொடர்ந்து, 'பின்னே எதற்காகச் செய்தாள்' என்ற கேள்வி தோன்றவும், அவளுக்கே ஒன்றும் புரியாது போயிற்று.

அவனிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறவள், அவள் செய்த அதிகப்படி வேலை, பணம், பதவி உயர்வு, இதற்காகவெல்லாம் இல்லை என்றால் வேறு எதற்கு?

என்ன யோசித்தும் அவளுக்குப் புரியவில்லை.

இந்தக் குழப்ப நிலையிலேயே, மேலும் இரு மாதங்கள் கடந்து போயின.

இந்த அறுபது நாட்களுமே, புவனேந்திரனை அவள் பார்க்கவே இல்லை.

வளாகத்துக்கு அவன் நேரில் வந்ததாகவும் தெரியவில்லை.

ஆனால், அவன் நேரில் வராவிட்டாலும், 'உன்னத'த்தில் பல மாற்றங்கள் நிகழலாயின.

ஜவுளிப் பகுதியைப் போலவே, வளாகத்தின் எல்லாத் துறைகளிலுமே, இந்த மாற்றம் அமலாக்கம் செய்யப்பட்டது.

மதியம் கடையை மூடுவது நிறுத்தப்பட்டது.

இந்த மாற்றங்களைத் தாங்கிய விளம்பரங்கள், பெரிய பத்திரிகைகளில் வெளியாயின.

இந்த மாற்றங்கள் பிடிக்காதவர்களும், அதுபற்றி, உரக்கப் பேசப் பயப்பட்டார்கள். சின்னப் பயல் என்று எண்ணப்பட்டவன், எங்கேயோ இருந்து கொண்டு, இங்கே இப்படி ஆட்டி வைக்கிறானே, இவனது காதுகள் எங்கெங்கே இருக்கின்றனவோ என்று அஞ்சினார்கள்.

அதற்கேற்ப, புதிதாகப் பலர் வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள்.

அவர்கள் அனைவருமே, புவனேந்திரனால், நேரடியாக வேலையில் அமர்த்தப்பட்டார்கள். கோகுலைப் போல!

பூவலிங்கத்தின் தலைமையில் மேலும் பலர் சேர்க்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததால், அது மிகவும் அவசியமாகவும் ஆயிற்று.

ஒரு காலத்தில் நளினி விரும்பிய விதமாகத்தான், வளாகக் கடைகள் 'ஜே ஜே' என்று நடந்தன. ஆனால், அதைப் பார்த்து மகிழ முடியாமல், அவளது மனதுதான் ஏனோ வெறுமையாக இருந்தது.

நாளுக்கு நாள் அந்த வெறுமை கூடிற்றே தவிர, ஒரு சிறிதும் குறைவதாக இல்லை.

எரிச்சலுற்றவளாய், அன்று இரண்டு மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொண்டு, நளினி 'உன்னத'த்தை விட்டுச் சீக்கிரமே கிளம்பி விட்டாள்.

ஆனால், வீட்டை நெருங்குகையில் அதுவும் பிடிக்கவில்லை.

ஏன் சீக்கிரம் வந்தாய்? உடம்புக்கு என்ன? குளிரா? காய்ச்சலா? என்ன என்று அன்னை ஆயிரம் கேள்விகளால், அவளைத் திணறடித்து விடுவாள்.

வீடு போகிற வழியில், சற்று நேரம் கடைகளில் சுற்றி விட்டு, மெல்ல வீட்டுக்கு நடந்து சென்றாள்.

வீடு இருக்கும் தெருவுக்குள் புகும்போது, அவளது வீட்டுப் பகுதியில் இருந்து, ஒரு பெரிய நீளக் கார், தெருவின் மறுமுனையில் வளைந்து திரும்பியது.

இது புவனேந்திரனின் கார் போலத் தெரிகிறதே, வீட்டுக்கு வந்திருப்பானோ? அவன் வருகிற நேரம் அவள் வீட்டில் இல்லாமல் போய் விட்டாளே!

பரபரப்போடு, ஓட்டமும் நடையுமாக, அவள் வீட்டுக்கு விரைந்தாள். அங்கே அவளுக்கு மேலாகப் படபடப்புடன், அவளுடைய தாயார் இருந்தாள்.

தந்தையும் கூட!

மகளைப் பார்த்ததும், சற்றே அதிர்ந்தாற் போல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

Advertisement