» காக்கும் இமை நானுனக்கு 7

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

பெற்றோர் இருவருமே அவளைத் திகைத்து நோக்கியது, நளினிக்கு வியப்பாக இருந்தது.

பொதுவாகக் குடும்ப அங்கத்தினருள் ஒளிவு மறைவு பழக்கமில்லை. அவசியம் இல்லாதது. அவசியமற்ற வீண் வேதனை என்று தோன்றிச் சொல்லாமல் விடுவது தவிர, எல்லாவற்றையும் கலந்து பேசி விடுவதுதான் வழக்கம். ஏதாவது குழப்பம் என்றாலும், நேரடியாகக் கேட்டு விடுவது தான்.

பெரியவர்களாகப் பேசட்டும் என்று சற்றுப் பொறுத்திருக்க முயன்றால், நளினிக்கு வினாடி யுகமாகத் தோன்றியது.

அது புவனேந்திரனின் கார் தானா, இல்லையா?

அவனது கார் தான் என்றால், அதில் அவனே தான் வந்தானா?

அவள் இல்லாத நேரத்தில் வந்து, அவளுக்குத் தெரியாமல், அவளுடைய பெற்றோரிடம் என்ன சொல்லியிருப்பான்?

ஓர் அரை நிமிஷ நேரம் கூடப் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல், "என்னம்மா விஷயம்?" என்று கேட்டு விட்டாள் அவள்.

மீண்டும் பெற்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவும், பொறுமையிழந்து, "அப்பா, ப்ளீஸ்! எதையும் மறைக்காமல், என்னிடம் சொல்லுங்க. நம் வீட்டுக்குப் புவனேந்திரன் வந்தாரா? அவரது காரைப் பார்த்தேனே, என்னவாம்? என்னை... என்னைப் பற்றி, ஏதேனும் சொன்னாரா? இப்படி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தது போதும். தயவு பண்ணி விஷயத்தைச் சீக்கிரமாகச் சொல்லுங்கள்... இ...இல்லாவிட்டால், இந்த இறுக்கம் தாளாமல், என் தலையே வெடித்துவிடும்." கெஞ்சுதலாக வற்புறுத்திக் கேட்டாள்.

அப்போதும் கணவனும் மனைவியும் அடுத்தவர் முகத்தைப் பார்க்கவும், கோபமும், கூடவே பயமும் தோன்ற, "போதும்பா! அதுதான் இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, இன்னமும் என்ன? முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு, அப்புறமாக உங்கள் பார்வையைத் தொடருங்கள். நீங்கள் இப்படிப் பதில் சொல்லாமல் தயங்கத் தயங்க, எனக்கு என்னவோ ஒரு மாதிரிப் பயமாக இருக்கிறதே!" என்று சற்றுத் தீனமான குரலில் முடித்தாள்.

மகள் கலங்குகிறாள் என்று அறிந்ததும், "பயப்பட ஒன்றும் இல்லை, பாப்பா," என்று பெற்றவர்கள் இருவரும் கோரசாக இயம்பினர்.

"பின்னே?"

நளினி கேள்வியாக நோக்கவும், "மெய்யாகவே பயப்பட ஒன்றுமே கிடையாதுதான். ஆனால், நாம் எதிர்பார்த்திராத சில விஷயங்களைப் பற்றித் திடுமெனக் கேட்கும் போது, சற்று அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது?" என்றார் சுதர்சனம்.

"அப்படி என்ன எதிர்பாராத விஷயம், இப்போது தெரிய வந்தது?"

"முதலில் உட்கார். பேசுவோம். ஏனென்றால், இது உனக்குத் தெரிந்திருக்க வேண்டிய விவரம்," என்று தொடங்கி, "நம் புவனேந்திரன் திருமணம் ஆனவர். உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"கல்யாணம் ஆகி..." என்று பெற்றவர் மேலே சொன்னது எதுவும் காதில் விழாமல், நளினிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

திருமணம் ஆனவன். ஏன் ஆகியிருக்கக் கூடாது? கிட்டத்தட்ட முப்பதைக் கூட எட்டாத வயது. தோற்றம் இருக்கிறது. தொழில் இருக்கிறது. வளம் இருக்கிறது. பெண் வீட்டார் மொய்ப்பதில் ஆச்சரியம் என்ன?

அவனுக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் கூட இருக்கக் கூடும். இயல்புதானே?

இதில், நளினி இவ்வளவு அதிர்ச்சி அடையவோ, வருத்தப் படவோ என்ன இருக்கிறது?

ஆனால், வயிறு காலியான உணர்வுடன் நெஞ்சை அடைத்து, கண்ணை இருட்டி, அவள் மயக்கமடைந்து கீழே விழாமல் இருந்ததே அதிசயம்தான்.

அந்த அளவுக்கல்லவா அதிர்ந்து போனாள்!

ஆனால், ஏன்?


யாரோ ஒருவன், அவன் முதலாளியாகவே இருந்தாலும், அவனது திருமணம் அவளை இந்த அளவுக்குப் பாதிப்பானேன்?

கேட்பானேன்? உண்மைதான். துலாம்பரமாக விளங்கிற்றே.

"கடவுளே! நான் புவனனை நேசிக்கிறேன். அதனால்தான்..."

"என்ன?" என்று பெற்றோரின் அதிர்ந்த குரல்களைக் கேட்ட பிறகுதான், தன் மனது எண்ணியதை வாய் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது என்பது, நளினிக்கே புரிந்தது.

என்ன மடத்தனம். நியாய அநியாயங்களைப் பற்றி, அவளுக்குத் தெளிவாகப் போதித்திருக்கும் நல்லவர்களான இந்தப் பெற்றோர், அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

கவலையும், வேதனையுமாக அவர்களைப் பார்த்து, "ஆனால், புவனேந்திரனோடு, நான் அப்படி ஏதும் பழகியது கிடையாதும்மா. என் மனதில் மட்டும் தான்... ஆனால், அவருக்கு மனைவி இருப்பது, எனக்குத் தெரியாதும்மா. யா...யாருமே சொன்னதே இல்லை. சொ...சொல்லியிருந்தால்..." என்று உள்ளிருந்த வலியில் மேலே பேச முடியாமல் நிறுத்தினாள், அவள்.

"மனைவி இருந்தால்தானே..." என்று தொடங்கிய கணவனை விழித்து நோக்கிவிட்டு, "பார் கண்ணு, புவனேந்திரனின் திருமணமே ஒரு பரிதாபமான கதை. இருபத்தோரு வயதிலேயே மணந்து கொண்டு இருக்கிறார். ஆனால், மணமாகிப் பத்தே நாட்களில், அந்தப் புது மனைவியைப் பறிகொடுத்தும் இருக்கிறார். பாட்டியிடம் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லாததால், திருமணம் பற்றி, முதலில் இங்கே தெரிவிக்கவே தோன்றவில்லையாம். பிறகு, அவளே போய்விட்ட பிறகு, தெரிவிக்கும் அவசியமே இல்லாது போயிற்றாம். இப்போது..." என்று சகுந்தலா தயங்கினாள்.

மணமாகிப் பத்தே நாட்களில், புது மனைவியைப் பறிகொடுத்திருக்கிறானே, பாவம் என்று உருகிக் கொண்டிருந்தவளுக்குத் தாயின் தயக்கம் மனதில் பட்டது.

பெற்றோரை மாறி மாறிக் கூர்ந்து பார்த்து, "இப்போது மட்டும் அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதிலும், இங்கே வந்து, உங்களிடம்?" என்று கேட்டாள் நளினி.

சகுந்தலா மேலும் தயங்க, "மிஸ்டர் புவனேந்திரனுக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறதாம். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாராம். அதனால், தன்னைப் பற்றிய விவரம் முழுவதையும் எங்களிடம் தெரிவித்து விடுவதுதான் நியாயம் என்று, இங்கே வந்து சொல்லியிருக்கிறார். உன்னிடமும் சொல்லச் சொன்னார். சொல்லி, நன்கு யோசித்து ஒரு முடிவெடுக்குமாறு கூறினார்," என்று ஒரு கணம் நிறுத்திவிட்டுச் சுதர்சனமே தொடர்ந்தார்.

"அம்மா, நீ உலகம் தெரியாத முட்டாளில்லை. உன்னை நாங்கள் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கவும் இல்லை. புவனேந்திரனின் வளம், வசதி பற்றி, உனக்கே தெரியும். நாம் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சம்பந்தம், இது. ஆனால், அவரிடம் இருக்கும் பணத்துக்காக, அவரை மணந்து கொள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நீயும் அவரை... அவரை நினைத்திருப்பதாகத் தோன்றுவதால்..."

அவரது பேச்சில் இடைமறித்து, "நீங்கள் ஓர் அபிப்பிராயம் தொனிக்கப் பேசாதீர்கள். எதையும், நளினியே யோசித்து முடிவெடுக்கட்டும்," என்றாள் சகுந்தலா.

ஆனால், உடனேயே, "அவரிடம் பணம் இருக்கலாம். ஆனால், என்ன இருந்தாலும், இரண்டாம் தாரம் அல்லவா? நம் பெண் புதுப் பூ! அதை நினைக்கும் போது எனக்கு உறுத்துகிறதே," என்றாள் தொடர்ந்து.

"என்னைச் சொல்லிவிட்டு, இப்போது நீ அபிப்பிராயம் கூறவில்லையா?" என்று மனைவியிடம் பாய்ந்தார் சுதர்சனம்.

"நீங்கள் சொன்னதால் தான் நானும் சொல்ல வேண்டியதாயிற்று," என்றாள் மனைவி பதிலுக்கு.

"என்னத்தைச் சொன்னாய்? பெரிதாக இரண்டாம் தாரம் என்றாயே, இன்றைக்கு எத்தனை பையன்கள் அங்கே இங்கே போகாமல், நல்லபடியாக இருக்கிறார்கள்? அதை என்னவென்று கொள்வது? தப்பான இடங்களுக்குப் போகாத நல்ல பையனாகத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று நானே கலங்கிக் கொண்டிருந்தேன். எப்படியும், புவனேந்திரன் நல்ல விதம் என்பது உனக்கும் நிச்சயம்தானே?" என்று சுதர்சனம் கேட்ட போது, சகுந்தலா மறுத்துப் பேசவில்லை.
புவனேந்திரன் அவர்கள் வீட்டிற்கு வந்து, நளினியோடு சேர்ந்து வேலை செய்த போது, அவனது கண்ணியமான நடத்தை குறித்துக் கணவன் மனைவி இருவருமே தனிமையில் பலமுறை பாராட்டிப் பேசியிருக்கிறார்கள்.

பார்வையில் கூடக் கனவான் என்று சகுந்தலாவே சொல்லியிருக்கிறாள்.

ஆனாலும் விடாமல், "அடியாட்கள் மாதிரி, இருவரைக் கூடவே அழைத்துக் கொண்டு அலைவதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது," என்றாள் பெற்றவள்.

"பத்திரிகையில் எத்தனை படிக்கிறாய், தொழிலதிபர் கடத்தல், அது இதென்று. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கையோடு இருப்பதைப் பாராட்டாமல், அசட்டுத் தனமாகக் குறைப்படுகிறாயே."

இருவர் பேச்சையும் அரை குறையாகக் கவனித்தபடி நளினி தனக்குள் யோசித்தாள்.

அவன் சிம்லாவுக்கு அழைத்ததை, அவசியமற்ற பிரச்சனை என்று பெற்றோரிடம் சொல்லாமல் விட்டது நல்லதாயிற்று என்று எண்ணினாள் அவள்.

அது மட்டும் தெரிந்தால், அவன் முகத்திலேயே விழித்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அவளை அப்படி அழைத்தவன், மற்றவர்களோடு அப்படிச் சென்றதே இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அப்புறம் என்ன நல்லவன்?

ஆனால், மெய்யும் பொய்யுமாய் உலா வரும் அலுவலக வதந்தியின்படி பார்த்தால், பெண்களிடம் அவன் நெருப்புதான். திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்றுதான் பேச்சு! கோகுல் மாதிரிக் கோவையிலிருந்து இங்கு வந்து பணிபுரிகிறவர்கள் கூட, அந்த மாதிரித் தவறாக, அவனைப் பற்றிப் பேசியதாகக் கேள்வி இல்லை. சிறு பொறி என்றால் கூடப் பெரு நெருப்பென்று பரவியிருக்குமே! ஒதுங்கிப் போனால் கூட, இது போன்ற விஷயம் என்றால், கூப்பிட்டு வைத்துக் கதையாய்ச் சொல்வார்கள். காவல் பொறுப்பாளர் என்று, கம்பீரமாக ஒதுங்கிப் போகும் பூவலிங்கமே, புவனேந்திரனுடைய பெற்றோர் பற்றி, அவளிடமே சொன்னாரே!

அப்படியானால், அவளிடம் மட்டும் தான், அவன் அப்படியா?

ஆமாம் என்றால்... நளினி சட்டென்று பரபரப்புற்றாள்.

ஒருவேளை, அப்போதே அவனிடம் பாதிப்பு ஏற்பட்டிருந்ததோ? உண்மை நேசம் என்று தெரியாமல், வெற்று ஆசை என்று எண்ணிக் கேட்டிருப்பானோ?

அப்படி மட்டும் இருந்தால்...

ஆனால், ஒரு தரம் மணந்தவனுக்குக் காதல் என்றால் என்னவென்று தெரியாதா?

அந்தக் கணத்தில், அவனை மணந்து, அவனோடு வாழ்ந்த அந்தப் பெண்ணின் நினைவில், அவளுக்கு வயிறு காந்தி விட்டது.

சே! பாவம் செத்துப் போனவளைப் பற்றி, என்ன இது என்று, நளினி தன்னைத் தானே கண்டித்து, நேர்ப்படுத்த வேண்டியிருந்தது.

மகளது முகத்தையே பார்த்திருந்தவர்கள் போல, "என்னம்மா?" என்று பெற்றோர் கேட்கவும், சட்டெனச் சுதாரித்தாள் அவள்.

"நா...ன்... எனக்குக் கொஞ்சம் யோசிக்க வேண்டும், அம்மா!" என்றாள். "என் மனமே எனக்கு இப்போதுதான்... இன்னமுமே, ஒன்றும் தெளிவாகப் புரியவில்லை. ஏதோ குழப்பமாக... அதனால்... அதனால்..." என்று முடிக்க முடியாமல் தடுமாறினாள்.

"அது சரிதானம்மா! வாழ்க்கை முழுவதற்குமான தீர்மானம். இதை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. அதனால, நிதானமா, நல்லது கெட்டது பற்றி நன்கு யோசித்து முடிவு பண்ணு. புவனேந்திரன் கூட, அப்படித்தான் சொன்னார். 'நீங்களும் நளினியுமாகத் தீர யோசித்து முடிவு பண்ணிச் சொல்லுங்கள்,' என்றார். ஆனால் பாவம்! கண்ணில் மட்டும் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்தது!" என்றார் சுதர்சனம்.

தந்தையின் விருப்பம், நளினிக்கு நன்றாகவே புரிந்தது.
தாய்க்கும் புவனனைப் பிடிக்கத்தான் செய்யும். தந்தை எடுத்துச் சொன்ன பிறகு, அவள் மறுத்துப் பேசவும் இல்லை.

ஆயினும்...

மறுநாள் அலுவலுக்கு நளினி சற்றுச் சீக்கிரமாகவே கிளம்பிச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், பெற்றவர்கள் மகளிடம் ஏன் என்று ஒன்றும் கேட்கவில்லை.

சந்தேகம் இருந்தால் தானே கேட்பதற்கு?

நளினி நேராகச் சென்ற இடம், புவனேந்திரனின் வீடுதான். ஆனால், வீடு வரை சென்றவளுக்கு, உடனே மனம் மாறிவிட்டது.

வீட்டிலுள்ள பணியாளர்களுக்கும், கடை வளாகத்து ஆட்களுக்கும் தொடர்பு இருப்பதாக, முன்பே ஒரு தரம் புவனேந்திரன் கூறியிருந்தது நினைவு வர, அங்கே சென்றால், தனியாக வீட்டுக்கே சென்றாளாம் என்று கண்ட பேச்சு கிளம்பக் கூடும் என்று தயக்கம் உண்டாயிற்று.

இது சரியில்லை.

சற்று யோசித்துவிட்டு, ஏதோ நினைவு வர, ஆட்டோவைத் திருப்பி ஓட்டச் சொன்னாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, சற்றுத் தொலைவில் ஒரு பூங்காவும் அருகில் ஒரு பொதுத் தொலைபேசி பூத்தும் கண்ணில் பட்டன. வரும்போது, அசுவாரசியமாகப் பார்த்தபடி வந்தது. நல்லவேளையாக நினைவு வந்ததே என்று எண்ணியபடி, அங்கே இறங்கிக் கொண்டாள்.

தொலைபேசியில் புவனேந்திரனை அழைத்தபோது, அவளுக்குக் கொஞ்சம் படபடப்புதான்.

ஆனாலும், "நா...ன்... நளினி பேசுகிறேன். உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். உங்கள் வீட்டிலிருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சின்னப் பூங்கா இருக்கிறது. அங்கே என்னைச் சந்திக்க முடியுமா?" என்று வேகமாகக் கேட்டு விட்டுப் பூங்காவின் பெயரைச் சொன்னாள்.

"அந்தப் பூங்காவை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். பத்து நிமிஷங்களில் அங்கே இருப்பேன்!" என்று அவன் உடனடியாக ஒப்பவும், நளினிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

உள்ளே சென்று தனியே உட்கார்ந்திருக்க மனம் வராமல், பூங்காவின் வாயில் அருகேயே நின்று கொண்டிருந்தாள்.

அதிக நேரம் காத்திருக்கத் தேவை இல்லாமல், அவன் சொன்ன பத்து நிமிஷங்களுக்கும் சற்று முன்னதாகவே, புவனேந்திரனின் நீளக் கார் அங்கே வந்து நின்றது.

சொன்ன நேரத்துக்கு முன்பாகக் கார் வந்துவிட்டது. அவளுக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், அவனுக்குப் பதிலாக, அவனுடைய பாதுகாவலர்களில் ஒருவன் இறங்கி வந்து, "சார் காரில் இருக்கிறார். வந்து காரில் ஏறிக் கொள்ளுமாறு, உங்களிடம் சொல்லச் சொன்னார்!" என்றதுதான், அவளுக்கு லேசாக உறுத்தியது.

காரில் ஏறினால், இந்தப் பாதுகாவலனும் கூட ஏறுவானே? அப்புறம், அவனிடம் தனியாக என்ன பேச முடியும்?

அவள் நினைத்தது போலவே, அந்தப் பாதுகாவலனும் காரில் ஏறிக் கொள்ளக் கார் கிளம்பியது.

மூன்று வரிசை உட்காரும் இடம் கொண்ட அந்தக் காரின் பின் சீட்டில், அவன் அமர, புவனேந்திரனுடைய அடுத்த காவலன் காரை ஓட்டினன்.

அவள் காரில் ஏறிக் கார் கிளம்பியதுமே, "நளினி வீட்டில் அம்மா, அப்பா சொன்னார்களா? உன் முடிவைச் சொல்லத்தான் அழைத்தாயா? என்ன முடிவு செய்தாய்?" என்று ஆவலாகப் புவனேந்திரன் கேட்கவும், நளினியின் மனம் துணுக்குற்றது.

பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் என்றாலுமே, மணமக்கள் இருவரும் மனம் விட்டுப் பேசும்போது, யாரும் கூட இருப்பதில்லை. காருக்குள் இன்னும் இருவர் இருக்கும் நினைவே இல்லாமல், இவன் என்ன, இப்படிக் கேட்கிறான்?

Advertisement