» காக்கும் இமை நானுனக்கு 8

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

இரண்டு அன்னியர்களை வைத்துக் கொண்டு, என்ன கேள்வி கேட்கிறாய் என்று அதட்டிப் பேசவும் நளினிக்கு மனம் வரவில்லை.

புவனேந்திரனைப் போய் எப்படி அதட்டுவது?

அத்தோடு, அவனது கேள்விக்குரிய பதிலையும், இப்போதே அவளால் கூற முடியாதே! சில விஷயங்களைப் பற்றிப் பேசித் தெளிவு பெற்ற பிறகுதானே, ...குறைந்த பட்சமாய் அவனிடம் ஓர் உறுதியேனும் பெற்ற பிறகல்லவா, அவளால் நிச்சயமாய்ப் பதிலைச் சொல்ல முடியும்?

ஆனால், அதையும் இந்த இரு காவலர்கள்... சகுந்தலாவின் பாஷையில் 'அடியாட்கள்' காது கேட்க, அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது.

எனவே, சிறு தயக்கத்துடன், "நான் உங்களிடம் சற்றுத் தனியாகப் பேச வேண்டும்!" என்று தாழ்ந்த குரலில், அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல விளம்பினாள்.

"தனியாகத்தானே..." என்று வியப்புடன் தொடங்கியவன் சட்டெனப் புரிந்து, முன்னே காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் தோளைத் தொட்டு, "முத்து, நேற்றுக் கூட்டம் நடந்த நட்சத்திர ஹோட்டல் நினைவிருக்கிறது, அல்லவா? அங்கே, காபி ஷாப்புக்குப் போக வேண்டும். உள்ளே போய் விட்டால், பாதுகாப்பான இடம்," என்றான்.

என்ன பாதுகாப்பு என்று எண்ணியபோதும், நளினி ஒன்றும் சொல்லவில்லை. காபி ஷாப் கூட்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள். ஏனெனில், அவள் பேச விரும்பியவற்றை, அடுத்தவர் அறிய கேட்க முடியாது!

நட்சத்திர ஹோட்டலில் காபி ஷாப்பில் அந்த நேரத்தில் பெரிதாகக் கூட்டம் இல்லைதான். மொத்தம் இருபது பேர் இருந்திருப்பார்கள். ஆனால், அந்த முத்து தன் சகாவோடு, அவர்களோடு கூடவே உள்ளே வந்து, அவர்களையும், நுழை வாயில்களையும் கவனிப்பதற்கு ஏதுவாக, முன்னும் பின்னுமாக, அவர்களுக்கு அடுத்த மேஜைகளில் உட்கார்ந்தது, அவளுக்கு எரிச்சலூட்டியது.

இப்படி இரண்டு பார்வையாளர்களள வைத்துக் கொண்டு, அவர்களால் எப்படித் தங்கு தடையின்றி, தன்னியல்பாகப் பேச முடியும்?

தன் மெய்க்காப்பாளர்களை நளினி பார்ப்பதைக் கவனித்து விட்டு, "முத்துவும், திருமயனும் எப்போதும் கூடவே இருப்பதால், அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாக நினைக்க எனக்குத் தோன்றுவது இல்லை," என்றான் புவனேந்திரன்.

"ஆனால், எனக்கு அப்படி எண்ணத் தோன்றவில்லையே," என்றாள் அவள்.

"தோன்ற வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் நீக்குப் போக்குக் கூடாது என்று, முன்பே நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். அதனால், இந்த இருவரையும், வாழ்வில் ஓர் நிரந்தர அங்கமாக நினைப்பதற்கு நீ பழகிக் கொள்ள வேண்டும்," என்றவன், தலையசைத்து, "நம்பிக்கைதான். என்றாலும், நீ இன்னமும் முடிவே சொல்லவில்லை. அதற்குள் எங்கே போய்விட்டேன் பார்," என்று லேசாக முறுவலித்தான். "சொல்லு நளினி. ஏதோ பேச வேண்டும் என்றாயே."

நம்பிக்கையா? எப்படி வரும்? அதுவும், கேவலமாக ஒன்று கேட்டு, அதை அவள் மறுத்து... எல்லாம் மறந்து விட்டானா?

அதைப் பற்றி இந்த இருவர் முன் எப்படிக் கேட்பது? ஆனால், கேளாமல் விடவும் முடியாது.

"அது... வந்து சார்..." என்று அவள் ஒருவாறு தொடங்க முயற்சிக்கையில், அவன் குறுக்கிட்டு, "இன்னமும் 'சாரா'?" என்று, மென் குரலில் கேட்டான்.

என்ன குரல்!

தலையை உலுக்கித் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "அ... அன்றைக்குப் பூவலிங்கம் சார் வேலைக்காக, சிம்லாவுக்குக் கூட, வந்து, ஏதேதோ கேட்டீங்களே அது... அது காதல்... வந்து, நேசத்தின் அறிகுறி ஆகுமா?" என்று, ஒரு வழியாகக் கேட்டே விட்டாள்.

கண்ணில் பாராட்டோடு, "கெட்டிக்காரத்தனமான கேள்வி. அதாவது, எப்போதிருந்து உன்னை நினைக்கத் தொடங்கினேன் என்று கேட்கிறாய். அப்படித்தானே?" என்று புன்னகை செய்தான்.

அவள் பேசாதிருக்கவும், "எப்போது என்று சொன்னால், உன்னால் நம்பக் கூட முடியாது, நளினி. அது... முதல் பார்வையில் என்று சொல்ல முடியாது. ஆனால், அசட்டுத் தனமாய் வேலையை விட்டு விட்டாயே என்றேனே, நினைவிருக்கிறதா? அப்போது உன் முகபாவம்! அன்றைக்கு என்னால் தூங்கவே முடியவில்லை. தூக்கம் வருவதற்காக, இரண்டு மணி நேரம் நீந்தினேன். ஆறு ஆண்டுகளாக, எந்தப் பெண்ணும் என்னை அப்படிப் பாதித்தது இல்லை. அதுதான், ஒரு வேளை நெருங்கிப் பழகினால், அந்தப் பாதிப்பு மறைந்து விடக்கூடும் என்று எண்ணினேன். ஆனால், நீ மறுத்த போதும் ஏமாற்றம் தோன்றாமல், ஒழுக்கத்தை மதிக்கிறாய் என்று, எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது..." என்றவன், அவளது விரிந்து நோக்கிய விழிகளைக் கண்டு சிரித்தான்.

"உண்மை கண்மணி. ஆனால், அப்போது, இவ்வளவு உறுதியாக நினைக்கவில்லை. உன்னோடு, உன் குடும்பத்தோடு பேசிப் பழகுவது சந்தோஷமாக இருந்தது. என் வரண்ட வாழ்க்கைக்கு அதுவே பெரிய சுகமாக, அதற்கு மேல், அப்போது நான் எதையும் நாடவில்லை. ஆனால், உன் கண்ணில் நேசம் தெரியவும், கலங்கிப் போனேன். நான் பட்ட மரம்! என்மேல், எப்படி...?"

அவன் கலங்கினானோ என்னவோ, நளினி ரொம்பவே திகைத்துப் போனாள்.

இவன் எப்போதோ அவளை அறிந்திருக்கிறான்.

இன்னதென்று அவளே அறியும் முன்பாகவே, அவன் தெரிந்து வைத்திருக்கிறானே.

ஒரு தொழிலதிபனாகப் பல தரத்தாருடன் பேசிப் பழகியதால் வந்த திறமையா? அல்லது... ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருந்ததால் வந்த அனுபவ அறிவா?

தன்னை மீறி, "அவர்களை... உங்கள் மனைவியை மிகவும் நேசித்தீர்களா?" என்று கேட்டாள் நளினி.

சில வினாடிகள், இந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்லப் போவதில்லையோ என்று நளினிக்குத் தோன்றியது.

ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று கூட!

அவளுக்கு யுகமாகத் தோன்றிய அரை நிமிஷத்துக்குப் பிறகு, மேஜை மேல் வைத்திருந்த கையிலிருந்து, புவனேந்திரன் பார்வையை அவள் முகத்துக்கு உயர்த்தினான்.

அவளது கண்களை நேராகச் சந்தித்து, "உன்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை, நளினி. அந்தத் திருமணம் நடந்தபோது, எனக்கு இருபத்தோரு வயது. ரதி இருபதை எட்டவில்லை. அந்தப் பத்து நாட்களுக்குள், சிரிப்பு, அழுகை, சச்சரவு, சமாதானம், அன்பு, ஆசை... எல்லாமே எங்களுக்குள் இருந்தது. சந்தோஷமாகவே இருந்தோம். அவள்...அவள் போன பிறகு, உலகமே இருட்டாகிப் போய் விட்ட மாதிரி இருந்தது. என் தொழில்கள், கூடவே, உள்ளூரச் சில பிடிவாதங்களும் இருந்ததால்தான், மீண்டு வந்தேன் எனலாம். உன்னைச் சந்திக்கும் வரையும், பெண்களிடம் வேறு எந்த நினைவும் எனக்கு வந்தது கிடையாது. உன்னைக் கூட, வந்து போகும் மேகத்தைப் போலச் சற்று வலுவான ஒரு சலனம் என்றுதான், முதலில் நினைத்தேன். பிறகு, உன் கண்ணில் ஆர்வத்தைக் கண்ட போதும், 'இந்தப் பட்ட மரத்தோடா?' என்று, ஓடி விடத்தான் முயன்றேன். ஆனால் உன்னைப் பிரிந்து வாழ முடியாது என்று இந்த இரண்டு மாதங்களில், ஐயம் திரிபற அறிந்து கொண்டேன்," என்றவன், கை நீட்டி, அவளது கரத்தைப் பற்றினான்.

"இனி, நீதான் சொல்ல வேண்டும்."

இணைந்திருந்த கரங்களின் மீது, நளினியின் பார்வை பதிந்தது.

அவனது வலிய, பெரிய கரம், அதனுள், மெல்லிய நீண்ட விரல்களுடன் அவளது கை. இரண்டும் மிகப் பொருத்தமாக இணைந்திருந்தன.

பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் பளிச்சிட்டன.

இமை தாழ்த்தி, அதை மறைத்து, "எப்படிச் சொல்ல வேண்டும்?" என்று வினவினாள் அவள்.

சிறு யோசனையில் சுருங்கிய புருவம் உடனே உயர, "எல்லோரையும் போல, உனக்கும் பிடித்திருக்கிறது என்று வார்த்தைகளால்தான்!" என்று கூறும்போதே, அவன் முகத்தில் ஆவலுடன் கூடிய முறுவல் மலரத் தொடங்கி விட்டது.

ஓரக் கண்ணால் நோக்கி, "இரு மாதங்களுக்கு முன்பாகக் கண்ணில் சேதி படித்தவருக்கு இப்போது படிக்கத் தெரியாதா, என்ன?" என்றபோது, அவளது குரல் கொஞ்சிக் குழைந்தது.

அவனது விழிகள் சட்டெனப் பளபளத்தன.

பார்வையோடு நில்லாமல், "இப்படிப் பொது இடத்துக்கு வந்தது சரியில்லை என்று இப்போது தெரிகிறது!" என்று அவன் கூறவும், அவளது கன்னங்கள் செம்மை பூசின.

ஆனாலும் விடாமல், "என்னைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு எல்லா இடங்களும் ஒன்றுதான்," என்றாள் நளினி.

"நிஜம்?"

"நிச்சயமான நிஜம்," என்று பிடிவாதமாக இயம்பினாலும், கூச்சமும் மிகவே, பார்வையைத் திருப்பியவளின் கண்களில், புன்னகையோடு வாயிலைப் பார்த்த திருமயன் தென்பட்டான்.

இவ்வளவு நேரம், புவனேந்திரனும் அவளும் பேசியது அனைத்தும், இவர்கள் இருவருக்கும் தெளிவாகக் கேட்டிருக்கும்! கேட்டிருக்கிறார்கள்! முகத்தைப் பார்த்தாலே தெரியவில்லையா?

அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமான ஓர் இனிய சல்லாபம், இன்னும் இருவரைப் பார்வையாளர்களாகக் கொண்டு அரங்கேறியிருக்கிறது.

தொண்டையில் ஏதோ கசப்பாக உணர்ந்தாள் அவள். அசங்கியமாகவும்.

பேச்சுப் போக்கில், அவளே இவர்களை மறந்து போனாளே! ஒரு வேளை, புவனனைப் போலவே, அவளும் ஆகிவிட்டாளா?

அதெப்படி முடியும்?

இப்போதே, புவனேந்திரன் அவளது கையைப் பிடித்ததையும், இந்த இருவரும் பார்த்திருப்பார்கள். இன்னும்...கன்னத்தை வருடுவது, ஒரு சின்ன அணைப்பு, உதட்டிணைப்பு... என்று இதெல்லாம் கூட நடக்கக் கூடும்தானே? அதெல்லாம் தனிமையில் நடப்பதுதானே, இனிமை? அவைகளுக்கும், இவர்களைச் சாட்சியாக வைத்துக் கொள்வது என்றால், நினைக்கவே நெஞ்சு கூசும் அருவருப்பாக இருந்தது அவளுக்கு.

இந்த ஒருதரமே, ஏதோ குழப்பமும் ஆர்வமுமாக, அவள் தன்னை மறந்து இருந்து விட்டாள். ஆனால் இதை நீடிக்க விட முடியாது. நிச்சயமாய்!

பாதுகாப்பு விஷயத்தில் நீக்குப் போக்குக் கூடாது என்று பிடிவாதமாக இருப்பவன் புவனேந்திரன். அவனிடம் அவசரப்பட்டுப் பேசிப் பெரிய பிரச்சனையாக ஆக்கி விடக் கூடாது, மெல்லத்தான் சொல்ல வேண்டும் என்று இப்போதைக்கு நளினி சும்மா இருந்த போதும், சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதில் அவளும் உள்ளூரப் பிடிவாதமாகவே இருந்தாள்.

அத்தோடு, இவர்கள் முன்னிலையிலேயே, அவளது எண்ணத்தைச் சொல்வதும் முடியாதுதானே?

ஆனால், புவனேந்திரன் அருகில் இவர்கள் இல்லாத நேரம் எது என்று யோசித்தவாறு பார்த்தால், குடித்த காஃபிக்கும், கொறித்த முந்திரிப் பருப்புக்கும் பில் வந்திருந்தது.

எப்போது கொண்டு வரச் சொன்னானோ?

"உன் வீட்டுக்குப் போய், அத்தை, மாமாவிடம் விஷயத்தைச் சொல்லி விடலாம், வா. பாவம், என்ன ஆயிற்றோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்!" என்று பில்லுக்குச் சில நோட்டுகளை வைத்து விட்டுப் புவனேந்திரன் எழுந்தான்.

என்ன கரிசனம்! அத்தையும், மாமாவும் கவலைப் படுவார்களாமே!

அதற்குள் உறவு கொண்டாடத் தொடங்கி விட்டானே!

"என் அப்பா, அம்மா பற்றி, என்னை விடக் கவலைப் படுகிறீர்கள்!" என்றாள் கிண்டலாக.

"பின்னே? உனக்கு அவர்கள் வெறும் பெற்றவர்கள்! ஆனால், எனக்காக அல்லவா, அவர்கள் உன்னைப் பெற்று வளர்த்து வைத்திருக்கிறார்கள்! இந்த நன்றி கூடக் காட்டவில்லை என்றால் எப்படி?" என்றான் அவன் பதிலுக்கு.

"அது சரிதான்! ஆனால், உங்கள் நன்றியை இன்னும் பல..." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, திருமயன் அருகில் வந்தான்.

"முத்து காரை எடுக்கப் போயிருக்கிறான் சார். எடுத்ததும், செல்லில் கூப்பிடுவான். அப்போது போனால் போதும்! அதுவரை..." என்று, அவர்கள் அருகே நெருங்கி நின்று, கவனத்துடன் சுற்று முற்றும் பார்க்கலானான்.

புவனேந்திரனைப் பாதுகாக்கிறானாம்.

ஒரு சின்ன விதையைப் போட்டு வைக்கலாம் என்று பார்த்தால், கெடுத்துவிட்டானே என்று தோன்றிய எரிச்சலை அடக்கிக் கொண்டு, பேசாமல் நின்றாள் நளினி.

வீட்டில் சுதர்சனம், சகுந்தலா இருவருமே இந்தச் செய்தியை எதிர்பார்த்திருந்ததாகவே தோன்றியது.

இனிப்பு எடுத்து வரும் சாக்கில் மகளை உள்ளே அழைத்துப் போய், "அந்த முதல் மனைவியைப் பற்றி... உனக்கு ஒன்றும் இல்லையேம்மா?" என்று சிறு கலக்கத்துடன் பெற்றவள் வினவினாள்.

தாயை நேராக நோக்கி, "அது அவரது கடந்த காலம் அம்மா. நிகழ்காலமும், எதிர்காலமும் நம்முடையதாக இருக்கும் போது, முடிந்து போன ஒன்றைப் பற்றி, நமக்கு என்ன, அம்மா?" என்று நளினி கேட்கவும், தாயின் முகமும் தெளிந்தது.

எப்போதேனும் சில நினைவலைகள் தோன்றி மறையக் கூடுமே தவிர, மற்றப்படி புவனேந்திரனின் முதல் திருமணத்தை முடிந்து போன விஷயமாகத்தான் நளினி நிச்சயமாக நம்பினாள்.

ஆனால், அது அப்படியல்ல, ஒரு விசித்திரமான வகையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று, அவள் அனுபவித்துத்தான் அறிய நேர்ந்தது.