» காக்கும் இமை நானுனக்கு 9

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

திருமண நிச்சயத்தைப் பகிரங்கப் படுத்தாமல், அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று புவனேந்திரன் சொன்ன போது, யாருமே அதை ரொம்பப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஏனெனில், அவனைப் பற்றி அவநம்பிக்கையுற வழியின்றி, ஒரு நீதிபதி, ஒரு போலீஸ் அதிகாரி, இவர்களின் முன்னிலையில், திருமணம் பற்றி எழுதிக் கையெழுத்திட்டு, அந்தப் பெரிய மனிதர்களின் சாட்சிக் கையொப்பத்தோடு, சுதர்சனத்திடம் அவன் ஏற்கனவே கொடுத்து விட்டிருந்தான்.

அதுவும் சுதர்சனமாக எந்த ஒரு உறுதியையும் கேட்கு முன்னதாகவே.

அத்தோடு, கோவைக்கே சென்று, அவனைப் பற்றிச் சுதர்சனம் தெளிவாக விசாரித்து அறியவும், வழி வகை செய்து கொடுத்திருந்தான்.

சுதர்சனத்துக்குப் பயணத்தில் மிகுந்த திருப்தி. அதன் பிறகு, வருங்கால மருமகன் என்ன சொன்னாலும், அவரைப் பொறுத்த வரையில், அப்பீலே கிடையாது.

சகுந்தலாவுக்கே, தன் செல்ல மகளுக்கு யார் யார் கண்பட்டு விடுமோ என்று பயம் தான்.

ஆனால், புவனேந்திரனுக்கு இது இரண்டாம் மணம் என்பதால், ஆரவாரம் வேண்டாம் என்று எண்ணுகிறானோ என்று அவளுக்குக் கவலையாகவும் இருந்தது.

என்ன இருந்தாலும், அவளுடைய மகளுக்கு இது முதல் திருமணம் தானே! அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டாமா?

ஆனால், "மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என்றதால், விட்டுவிட்டேன் சக்கு!" என்று சுதர்சனமும் சொல்லி விட்டார்.

மகளுக்கோ, சடங்குகள், சம்பிரதாயங்கள், உறவினர், கூட்டம் பற்றிய நினைவே இருக்கவில்லை. அவளைப் பொறுத்த வரையில், புவனேந்திரனை அடிக்கடி கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதே போதுமானதாக இருந்தது.

பானகத் துரும்பாக ஒரே ஓர் எரிச்சல். அவனைத் தனியே சந்திக்க, பேச முடியாமல், பாதுகாப்பு, பாதுகாப்பு என்று அவனது மெய்க்காப்பாளர்கள் கூட இருந்ததுதான்.

ஒருவருக்கு ஒருவர் என்று ஆன பின், அவனைப் பார்க்க வேண்டும், கேலியும் கிண்டலுமாகப் பேசிச் சிரிக்க வேண்டும், தோளில் சாய வேண்டும், அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டும் போது, பதிலுக்குத் தானும் அவன் மூக்கைப் பிடித்து ஆட்ட வேண்டும் என்று வயதுக்கும், நிலைமைக்கும் உரிய எத்தனையோ ஆசைகள் அவளுக்கு.

சொல்லப் போனால், எல்லாமே வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டவைதான்.

ஆனால், எப்போதும் புவனனுடன் கூடவே இருந்த பாதுகாவலர்கள் முன்னிலையில், ஒன்றுமே முடியாமல், தன்னை அடக்கிக் கொண்டு, அவள் சும்மா இருக்கும்படி ஆயிற்று.

நாளுக்கு நாள் பொறுமையிழந்து கொண்டிருந்த நளினிக்கு, அந்த நிலையை எப்படி மாற்றுவது என்பது தவிர, வேறு எதுவும் பெரிதாகத் தோன்றவே இல்லை.

எனவே, சகுந்தலாவும், தன் ஆசைகளை அடக்கிக் கொள்ளும்படி ஆயிற்று.

ஆனால், பூ விரியும் போது வாசனை பரவுவதைத் தடுக்க முடியுமா?

நல்ல வரன் இருப்பதாகக் கூறிக் கொண்டு, ஒரு திருமணத் தரகர் வந்தார். அவரிடம் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி விட்டதைச் சொல்லுவது தானே முறை?

அத்தோடு நளினியுடைய குடும்பம் வசித்தது ஃப்ளாட்டில். எல்லோரிடமும் தோழமையோடு பழகுகிற குடும்பம் என்பதால், பேச்சுவாக்கில், நளினி புவனேந்திரன் திருமணம் பற்றிய செய்தியும் அரசல் புரசலாக வெளியே பரவலாயிற்று!

இந்நிலையில், ஒரு நாள் தெரு முனையில் இருந்த பலசரக்குக் கடையில், வெல்லம் வாங்கி வரச் சென்ற நளினி, தன் பின்னோடு, ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு, ஒருவன் தொடர்ந்து வரவும் சற்று மிரண்டாள்.


யாரிவன்? எதற்காகப் பின் தொடர்கிறான்?

பொதுவாக, அந்தப் பகுதியில் பயம் கிடையாது. பல ஆண்டுகளாக அங்கேயே வசிப்பதால், பார்த்தால் குறைந்த பட்சமாக ஒரு புன்முறுவலைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குத் தெரிந்தவர்களே! உதவி என்று அழைத்தால் கட்டாயம் வருவார்கள். எனவே, சின்னப் பிள்ளை கூடத் தனியாகக் கடைக்குப் போய்ச் சாமான் வாங்கி வரும்.

அந்த அளவுக்குப் பாதுகாப்பானது.

பாதுகாப்பு.

சட்டெனப் பொறி தட்ட, நளினி நின்று, தன்னைத் தொடர்ந்தவனைக் கூர்ந்து நோக்கினாள்.

சுற்று முற்றும் கவனத்துடன் ஆராயும் அதே பார்வை! பான்ட் பாக்கெட்டில் மறைந்திருந்த ஒரு கை! துப்பாக்கியோ, கத்தியோ, ஏதோ ஓர் ஆயுதத்தின் பிடியில் அந்தக் கை இருக்கும் என்பது, புவனேந்திரன் மூலம் அவள் அறிந்த விஷயம்.

ஏன் இப்படிப் பாக்கெட்டுக்குள் கையை வைத்தபடியே இருக்கிறார்கள் என்று, முத்து, திருமயன் பற்றிக் கேட்டபோது, புவனேந்திரன் அவளிடம் சொல்லியிருக்கிறான். ஏதேனும் அவசரம் என்றால், அப்போது பயன்படுத்த, ஆயுதம் தயார் நிலையில் இருக்க வேண்டுமாம்!

'தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம்!' என்று பழமொழி உண்டுதான்.

ஆனால், இன்னொரு மனிதரை ரத்தம் சிந்த வைப்பதற்குத் தயார் நிலையில் ஒருவன் அலைவது என்றால், அவளுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது.

அது ஒரு புறம் இருக்க, தனக்குத்தான் பாதுகாப்பு, பாதுகாப்பு என்று இரண்டு பேரை எப்போதும் கூட்டிக் கொண்டு, அடியாட்களோடு திரியும் தாதா போலப் புவனேந்திரன் அலைகிறான் என்றால், அவளுக்குமா?

அவனையே, இந்தப் பழக்கத்தை விட்டொழிக்கச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தவளுக்கு, ஆத்திரம் வந்தது.

அல்லது, ஒரு வேளை அவள் தான் தவறாக எண்ணுகிறாளோ?

இந்த இடத்தில், யாரும் அவளை எதுவும் செய்துவிட முடியாது என்ற தைரியத்துடன், நளினி, அந்தப் புதியவனை ஒற்றை விரலால் அருகில் அழைத்தாள்.

அவன் வந்ததும், "என்ன வேலை இது? ஏன் என் பின்னோடு வருகிறீர்கள்?" என்று விசாரித்தாள்.

ஆனால், அவள் கூப்பிட்டதும் தயங்காமல் அவன் வந்த விதமே, அவளுக்கு உண்மையை உணர்த்தி விட்ட போதும், ஒரு வேளை அப்படியிராதோ என்று ஒரு சிறு நப்பாசையில், அவனிடம் கேட்டாள் நளினி.

ஆனால், நப்பாசை அற்பாசை ஆகிவிட, "என் பெயர் சக்திவேல். உங்கள் பாதுகாப்புக்காகப் புவனேந்திரன் சார், என்னையும், கண்ணன் என்று இன்னும் ஒருவரையும் நியமித்திருக்கிறார்," என்றான் அவன்.

"இன்னும் ஒருவர் வேறா?"

"ஆமாம்! ஒருவரை மட்டும் பாதுகாப்புக்கு வைப்பது, இக்கட்டான சமயங்களில், பயனற்றுப் போய்விடும். எப்போதுமே, குறைந்தது இரண்டு பேரேனும் சேர்ந்து, இந்த வேலை செய்வது நல்லது," என்று விளக்கினான் அவன்.

நளினிக்கு, வெடிக்கப் போகும் எரிமலை போன்று, மனம் குமுறியது.

ஆனால், அவளது கோபத்தை இவனிடம் காட்டி என்ன செய்வது? எய்தவன் இருக்க, அம்பை நோவது மடத்தனம்.

எனவே, பிடிவாதமாகப் புன்னகைத்து, "ஆமாமாம்! புவனேந்திரன் ஒன்று செய்து, அது பலனற்றுப் போகலாமா? இவ்வளவு நேரம் சும்மா நின்று போரடித்திருக்குமே. அந்தக் கடைக்குப் போய், உபயோகமாய் ஒரு கிலோ வெல்லம் வாங்கி வாருங்களேன்," என்றாள் அவள், இனிய குரலில்.

குரலில் மறைந்திருந்த ஏளனம் எளிதில் கண்டு பிடிக்கக் கூடியதில்லை. பௌதிகப் பாடத்தில், 'உள்ளுறை வெப்பம்' என்பார்களே, அதைப் போல வெளிப்படையாகத் தெரியாமல் கலந்திருந்தது.

அதை, அந்தச் சக்திவேல் கண்டு பிடித்தானோ என்னவோ? ஆனால், வெல்லத்தை வாங்கி வர மறுத்து விட்டான்.

"என் வேலை உங்கள் பாதுகாப்பு, மேடம். கடைக்குப் போய்ச் சாமான் வாங்குவதில் என் கவனத்தைச் சிதற விட முடியாது," என்று ஒரு காரணத்தைச் சொன்னானே தவிர, இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.

அதுவே அவளுக்கு எரிச்சல்.

போதும் போதாதற்கு, அந்தக் குடியிருப்புகளின் சங்கத் தலைவர் வேறு, அவர்களைப் பார்த்துவிட்டு, அருகில் வந்து, "யாரம்மா? எதுவும் பிரச்சனையா?" என்று விசாரிக்கத் தொடங்கினார்.

இந்த மாதிரி விஷயம் என்று உண்மையைச் சொன்னால், பந்தாக் காட்டுவது போல இருக்கும். எனவே, "பி...பிரச்சனை ஒன்றும் இல்லை, அங்கிள். தெரிந்தவர் தான். சும்மாதான் பே... பேசிக் கொண்டிருக்கிறேன்..." என்று ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்லிச் சமாளிக்கும்படி ஆயிற்று.

தலையாட்டிவிட்டு அவர் போய் விட்டாலும், நளினியின் சீற்றம் தணிய வெகு நேரம் ஆயிற்று.

ஆத்திரத்தில் புவனேந்திரனிடம் ஏதாவது கண்டபடி பேசிவிடக் கூடாது என்று தோன்றவே, மனம் சற்றுச் சமனப்படும் வரை நளினி பொறுத்திருந்தாள்.

என்ன தான் பழைய ராஜாக்கள் காலம் மாதிரி மெய்க்காவலர்களை அவன் அவனுக்கு வைத்திருப்பதே அவளுக்குப் பிடிக்காவிட்டாலும், அவனோடு வாக்குவாதம் செய்யப் பிடிக்காமல் வாளா இருந்தாள். ஆனால், இப்போது அவன் நியமித்திருப்பது அவளுக்கு அல்லவா?

முன்னதைக் காட்டிலும், இது அதிக எரிச்சல்தான். ஆனால், அவன் செய்தது, அவளது நலம் கருதி. அதனால், அவனிடம் சினம் காட்டுவது, சரியல்ல. நிதானமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒருவாறு மனதை அமைதிப்படுத்திக் கொண்டு, புவனேந்திரனுக்குப் போன் செய்தால், அவளிடம் விடை பெறாமலே, அவன் சென்னையை விட்டுக் கிளம்பிச் சென்றிருந்தான்.

அப்படி அவன் சொல்லாமல் சென்றதே இல்லையே.

மறுநாளில் இருந்து, திரும்பி வரும்வரை, அவளைப் பார்க்க முடியாதே என்று வருத்தப் படாமல், அவன் பிரிந்து போனதும் கிடையாதுதான்.

சட்டென நளினியின் மனம் கலங்கிப் போயிற்று.

'போய் வருகிறேன்' என்று ஒரு வாக்கியம்.

அவளிடம் ஏன் சொல்லவில்லை? ஏதேனும் கோபமா?

ஏன் கோபம்? அவள் ஏதேனும் தப்பு செய்தாளா?

அவளை அறியாமலே ஏதேனும் தப்பு செய்து, அவளிடம் மனம் வெறுத்துப் போய் விட்டானா?

முன்பும், இதே போல நன்றாகப் பழகிக் கொண்டு இருந்த போதுதான், திடீரென்று ஒதுங்கிக் கொண்டான்.

இப்போதும் அப்படிச் செய்ய மாட்டான் என்று, என்ன நிச்சயம்?

முன்பு திரும்பி வந்தான். ஆனால், இப்போதும் வருவான் என்று என்ன நிச்சயம்?

தொழில் இருக்கிறது. கட்டாயம் வரத்தான் போகிறான்.

ஆனால், அவனிடம் உள்ள அன்பு? அது மாறாமல் இருக்குமென்று என்ன நிச்சயம்?

நிச்சயம் தான். நிச்சயமேதான்! இதே தொழில் முன்னரும் இருந்தது! ஆயினும், அது போதாதென்று, அவளுக்காக வரவில்லையா?

இப்போதும் வருவான்.

இப்படிப் பலவாறு யோசித்து, மிகவும் சிரமப்பட்டு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அவள் கவலையோடு காத்திருந்தால், ஒன்றுமே நடவாதது போல, அவன் வெகு சாதாரணமாகத் திரும்பி வந்தான்.

வந்தவன், அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றது பற்றி, எந்த விளக்கமும் இல்லாமல், "இந்தத் தளிர்ப் பச்சை வண்ண சல்வாரில், நீ தேவதை மாதிரி இருக்கிறாய்!" என்ற போது, நளினியால் அதை இயல்பாக ஏற்க முடியவில்லை.

பத்து நாட்களாகப் பட்ட துன்பம் உசுப்ப, "நான் உங்களைத் தேடினேன். ஆனால், நீங்கள் ஊருக்குப் போய்விட்டதாக, உங்கள் வீட்டுக் காரியஸ்தர் சொன்னார்," என்றாள் ஒரு மரத்த குரலில்.

ஒரு விநாடி தயங்கினானோ?

அவள் நிச்சயப்படுத்திக் கொள்ளுமுன், "அடடா!" என்று தலையில் தட்டிக் கொண்டான் புவனேந்திரன். "இதைத்தான் துரதிர்ஷ்டம் என்பது. வழக்கமாக, நானாகத்தானே ஓடி ஓடி வருவது? அப்படியின்றி அதிசயமாக, மகாராணி நீயே என்னைத் தேடி வந்தால், அந்தச் சமயம் பார்த்து, வேலை என்னை வேறிடத்துக்கு அழைத்துச் சென்று விட்டது, பார்! என்னம்மா, ஏதும் தன்னந் தனிமையில் கவனித்தாக வேண்டிய சமாசாரமா? அதற்கெல்லாம், கால நேரம் எதற்கு? இப்போது வேண்டுமானாலும்... என்ன சொல்லுகிறாய்?" என்று தணிந்த குரலில் கொஞ்சலாகக் கேட்டுக் கண் சிமிட்டினான்.

அவனது பேச்சின் பொருளும், கண் சிமிட்டலுமாக, நளினியின் முகம் செக்கச் சிவந்து போயிற்று.

"ச்சு! போங்கள். என்ன பேச்சு இது? நான் ஒன்றும், அந்த மாதிரி உங்களைத் தேடவில்லை. ஆனால்..." என்றவளை இடைமறித்து, "நினைத்தேன்," என்றான் அவன் சோகமாக.

"நமக்கேதுடா அப்படிப்பட்ட அதிர்ஷ்டமெல்லாம் என்று, முதலிலேயே சந்தேகம் தான்! ஆனாலும், ஒரு நிமிஷம் மனம் என்னென்னமோ ஆகாயக் கோட்டை கட்டி விட்டது. ஆனாலும், அவ்வளவு உயரத்திலிருந்து, மனிதனை இப்படித் தடாலென்று படு பாதாளத்தில் தள்ளக் கூடாதும்மா. பார், ஏமாற்றத்தில் எனக்குச் சரியாகப் பேசக்கூட முடியவில்லையே," என்று, அவன் மேல் மூச்சு வாங்கிக் காட்ட, அடக்க மாட்டாமல், அவளுக்குச் சிரிப்பு வந்துவிட, அந்தப் பேச்சு அத்தோடு போயிற்று.

அவளை வீட்டிற்குக் கூட்டி வந்து, பெற்றோருடன் கலகலப்பாகப் பேசியிருந்து விட்டுப் புவனேந்திரன் கிளம்பிச் செல்லும் வரை, நளினிக்கு வேறுபாடாக ஒன்றும் தோன்றவில்லை.

அதிலும், பேசியது திருமணத் திட்டங்கள்!

எப்படி எளிமையாகக் கோவிலில் திருமணத்தை முடித்துக் கொண்டு, நேரே திருமணப் பதிவு அலுவலகத்துக்குப் போய்த் திருமணத்தைப் பதிவு செய்து விடுவது என்று மண நாளின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி, அவன் விளக்கிக் கூறிய போது, நளினியின் முழு மனதும் அதில்தான் இருந்ததே தவிர, வேறு எதையும் எண்ணிப் பார்க்கக் கூட அவளுக்குத் தோன்றவில்லை.

பிறகும், வீட்டினர் நால்வரும் அது பற்றித்தான் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

தான் விரும்பியது போல, விலை உயர்ந்த டிஷ்யூ, புரோகேட் சேலைகளில் மகளை அலங்கரித்துப் பார்க்க முடியாது போல இருக்கிறதே என்று, சகுந்தலா குறைப்பட்டாள். சூரிய சந்திரப் பிரபைகளோடு நெற்றிச் சுட்டி, நத்து, இடுப்பில் ஒட்டியாணம் என்று, தன் அழகிய மகளின் அலங்காரம் பற்றி, அவளுக்கு எண்ணிறந்த கனவுகள்.

வருங்கால மருமகனின் எளிமையான திருமணத் திட்டத்துக்கு, அந்த மாதிரி அலங்காரங்கள் சற்றும் பொருந்தாது.

இந்தச் சுருக்கமான எளிய திருமணத்திற்கு, அவர் விரும்பிய வண்ணம், அக்கம் பக்கத்தார், உறவினர், நட்பாளர்கள் அனைவரையும் எப்படி அழைப்பது என்ற குழப்பம் சுதர்சனத்துக்கு.

இதற்கிடையே, "எனக்கு வகுப்பில் எந்தப் பரீட்சையும் இல்லாத நாள் பார்த்துத் திருமணத்தை வையுங்கள். லீவு போடவும் சொல்லாதீர்கள். நான் பிளஸ் டூவாக்கும்!" என்று பெரிய முக்கியஸ்தி போல, ஊடுபா ஓடினாள், தங்கை மஞ்சரி.

வீட்டுக் கடைக்குட்டி என்பதால், அவளது பேச்சில் எல்லோருக்கும் சிரிப்புதான் வந்தது.

பேச்சும் சிரிப்புமாக இருந்து விட்டு, நால்வரும் படுக்கப் போகவே, மணி பதினொன்றை நெருங்கி விட்டது.

ஆனால், புவனேந்திரனின் புன்னகை முகத்தை நினைத்த வாறே சுகமாகப் படுத்தவளுக்குச் சட்டென்று உறுத்தியது.

சொல்லாமல் கொள்ளாமல், தான் திடுமென வெளியூர் சென்றது பற்றிய விவரத்தைப் புவனேந்திரன், அவளிடம் சொல்லவே இல்லை.

எப்போதுமே, தனது வேலைகளை எல்லாம் அவளிடம் அவன் ஒப்பித்துக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. அப்படி அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

'உன்னதம்' தவிர, அவனது மற்றத் தொழில்கள் பற்றி, அவனே சொன்னாலும், அவளுக்குப் புரிவதற்கில்லை.

ஆயினும், மில்லுக்குப் பஞ்சு வாங்கப் போனேன், பிரிண்ட் போட்ட பனியன் துணி ஏற்றுமதிக்கு முடித்துக் கொடுப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது. இப்படிப் பொதுவாக என்ன விஷயம், எங்கே போனான் என்பதைப் பற்றிச் சொல்லுவான்.

செல்லும் போதும் சொல்லுவான். அல்லது, வந்த பிறகேனும் பேச்சில் வரும். 'உன்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை!' என்பது போன்ற இயல்பான பேச்சு.

எப்படியும், இன்னும், 'இத்தனை நாட்கள் உன்னைப் பார்க்க முடியாதே!' என்று வருத்தப்படாமல் அவன் பிரிந்து சென்றதே கிடையாது.

ஆனால் இந்த முறை அதெல்லாம் ஒன்றுமின்றி அவன் சென்றது மட்டுமின்றி, சென்று என்ன செய்தான் என்பதையும் சொல்லாமலே மழுப்பி விட்டான்.

அது மழுப்பலேதான்.

மேற்கொண்டு பிடிவாதமாகக் கேட்டு விடுவாளோ என்ற கலக்கத்தில், அதைத் தவிர்ப்பதற்குத்தான், புவனேந்திரன் அவ்வளவு கொஞ்சலும் குலாவலுமாகப் பேசினானோ?

திருமணத் திட்டங்கள் பற்றி விவரித்தது கூட அதற்காகத் தானோ என்று தோன்றவும், நளினி குழம்பிப் போனாள். குன்றியும்!

எப்போதுமே, அவன் சென்னையில் இல்லாத போது, நளினிக்குக் கொஞ்சம் மனதுக்குச் சோர்வாகத்தான் இருக்கும். அப்புறம், அவன் திரும்பி வந்ததும், உலகம் வண்ண மயமாக ஆகிவிடும்.

இப்போது அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் போன போது தோன்றிய, புவனேந்திரன் தன்னை வெறுத்து விட்டானோ, விலகிப் போய் விடுவானோ என்று தோன்றிய கலக்கங்கள் எல்லாமே, அவனை நேரில் பார்த்த பிறகு அடியோடு மறைந்து போயின.

ஆனால், அவன் அறியக் கூடாத ஏதோ ஒரு மர்மம் அவனது வாழ்வில் இருக்கிறதோ என்ற ஐயம் இப்போது அவளுக்கு உண்டாயிற்று.

அது என்னவாக இருக்கக் கூடும்?

அவளிடம் சொல்லக் கூடாதது என்றால், ஒரு வேளை, அது அவனுடைய முதல் மனைவி சம்பந்தப்பட்டதாக இருக்குமோ?