» இன்பப்பால்

ஆசிரியர் : பொய்கையார்.
௨௰)

அறங்கரை நாவானாம் ஆய்மயிலார் சீரில்
அறங்கரையா நாப்பண் அடைவாம் - புறங்கரையாத்
திண்மை நிலையின் உயர்புலத்தில் சேர்வாம் ஈண்டு
எண்ணிலைக்கு உய்வாய் இது

௨௰௧)

துணைஎன்ப காமவிருந்து துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகார் ஆகல் - புணைதழீஇக்
கூட்டும் கடுமிசையான் கட்டியில் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகும் அணி

௨௰௨)

ஒப்புயர்வில் வேட்டோன் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கு அறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து

௨௰௩)

பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் - தழைகாதல்
வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந்து அணந்து

௨௰௪)

அழுக்குடம்பு யாத்தசீர் மெல்லியலை ஆணம்
முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக் - குழீஇக்கூடல்
என்னே செறிகாமம் பூட்டும் இயல்மாரன்
மன்னரசால் மாண்பூப்பு உலகு

௨௰௫)

இன்ப இயலோரார் யாணர் விழைகாமம்
பொன்னின் அணிமலரின் செவ்விதாம் - தன்மேனி
முத்தம் முறுவல் முயக்கொக்கின் அன்னத்தின்
பெற்றியரின் என்பெறும் பேறு

௨௰௬)

தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பைஅலர்
காவியன சேல்கண் குறுந்தொடியார் - ஆவிக்கு
இனியர் இணைசேரார் ஈர்ங்கண் மாஞாலத்
தனிமைக்கு அவரோர் கரி

௨௰௭)

காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின்
ஏம இருக்கையே தூம்திரையாம் - ஏமத்தீண்டு
ஆம்பாலே தோன்றும் அளிஊடலாம்பரலில்
தெற்றித் தெறிப்பாம் ஒளி ஒளிபாய் கண்ணே சீர்த்
துற்றுகப்பாய்ப் பெற்ற மகவு

௨௰௮)

கறங்குபறை காணா உறுஊனைக் காதல்
பிறங்கறை நாவாரும் அதே - திறம்இரங்கி
ஊடிஉணர் வாரே தாம்இசைவார் பல்காலம்
ஈடிலதோர் இன்ப விருந்து

௨௰௯)

தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை
ஏற்றுக்கழல் தொடியார் மிக்காரை யார்வரைவர்
போற்றளி கூடல் கரி

௩௰)

காதல் விரிநிலத்து ஆராவகை காணார்
சாதல்நன்று என்ப தகைமையோர் - காதலும்
ஆக்கி யளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே
நோக்கிலரை நோவது எவன்

௩௰௧)

அளகும் அளிநாகைப் பேண அணியார்
அழகுஅரிவை வீழ்முயக்கை அண்ணாத் - தளியாளர்
பெற்ற பிறக்கெறிந்து புத்தாய பெட்டுழலும்
பெற்றியர் பெட்ட கழுது

Advertisement